அரைகுறை பணி: நீர் நிறைந்த செவல் கண்மாய்
அருப்புக்கோட்டை: நவ. 12--: அருப்புக்கோட்டை செவல் கண்மாய் பராமரிப்பு பணி அரைகுறையாக நடந்து கொண்டிருக்கும் போதே கண்மாய் நிறைந்தது. அருப்புக்கோட்டை புளியம்பட்டி பகுதியில் 15 ஏக்கரில் செவல் கண்மாய் உள்ளது. முன்பு இந்தப் பகுதியில் சுற்றி உள்ள வீடுகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்தது. நகராட்சி மூலம் போர்வெல் போட்டு இங்கிருந்து தண்ணீர் எடுத்து வீடுகளுக்கு வினியோகம் செய்து வந்தனர். நாளடைவில் கண்மாய் பராமரிப்பின்றி போனதால் சுற்றியுள்ள வீடுகளின் கழிவு நீர் கண்மாயில் விடப்படும் கண்மாய் சுகாதாரக் கேடாக மாறியது. இதனால் கொசு அதிகமாக உற்பத்தியாகி இந்த பகுதி மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து, நக ராட்சி மூலம் கண்மாயை புனரமைப்பு செய்ய 2023 ல், ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கண்மாயில் ஆகாய தாமரைகளை அகற்றி தடுப்பூச்சுவர் கட்டி கரை பகுதியில் வாக்கிங் செல்ல நடைபாதையும் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடந்தது. பணிகள் மந்த கதியில் நடந்ததால், அப்போது பெய்த மழையில் கண்மாய் நிறைந்து ஆகாய தாமரை அடர்த்தியாக வந்தது. மீண்டும் அவற்றை அகற்றி பணிகள் செய்யப்பட்டது. தடுப்புச்சுவர் கட்டும் பணியும் நடந்து வருகிறது. ஆகாயத்தாமரை முற்றிலும் அகற்றப்பட்ட நிலையில், 10 நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழையில் கண்மாய் நிறைந்தது. மீதமுள்ள கண்மாய் பணிகளை விரைந்து முடித்து தடுப்புச் சுவர் நடைபாதை உள்ளிட்ட பணிகளை விரைவில் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும்.