சூறாவளி, இடி, மின்னலுடன் பலத்த மழை
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை திருச்சுழி, சாத்துார், தாயில்பட்டி, வெம்பக்கோட்டை , வெற்றிலையூரணியில் பகுதிகளில் நேற்று மாலை பெய்த கன மழையில் மரம் விழுந்தது, பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அருப்புக்கோட்டையில் சில நாட்களாக கோடை வெயில் கொளுத்திய நிலையில், நேற்று மாலை 4:00 மணிக்கு மேல் பலத்த காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் அருப்புக்கோட்டை, ஆத்திப்பட்டி, கோபாலபுரம், கோவிலாங்குளம், ராமானுஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. அருப்புக்கோட்டையில் மதுரை ரோடு விருதுநகர் ரோடு பல இடங்களில் வாறுகாலில் வெள்ளம் நிறைந்து ஓடியது. நாடார் மயான ரோட்டில் பலத்திற்கு மரம் ரோட்டின் நடுவே விழுந்தது இதனால் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது. நகராட்சி பணியாளர்கள் மரத்தை வெட்டி அப்புறபடுத்தினர். நகராட்சி தற்காலிக பஸ் ஸ்டாண்டில் வெள்ளம் சூழ்ந்தது.*தாயில்பட்டி வீசிய மழையுடன் வீசிய சூறாவளியால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து டிரான்ஸ்பார்மர் மற்றும் உயரழுத்த மின்கம்பியில் சாய்ந்தது. இதன் காரணமாக விஜயகரிசல்குளம், எதிர் கோட்டை, மடத்துப்பட்டி, தாயில்பட்டி, சுப்பிரமணியபுரம், இறவார் பட்டி பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இரவு வரை மின்சார வாரியத்துறையினர், தீயணைப்புத்துறையினர் மரக்கிளைகளை அகற்றி சீரான மின்விநியோகம் வழங்கும் பணியில் ஈடுபட்டனர். சாத்துார் பகுதியில் வீசிய சூறாவளி காற்றில் எஸ்.ஆர். நாயுடு நகரில் ஒரு வேப்ப மரம் முறிந்தது. மின்வாரியத்தினர் மரக்கிளையை அகற்றி மின்சப்ளை வழங்கினர்.