உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நெடுஞ்சாலை துறையினர் மெத்தனம்; தொடர் நடவடிக்கை இல்லாததால் மீண்டும் அதிகரிக்கிறது

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் நெடுஞ்சாலை துறையினர் மெத்தனம்; தொடர் நடவடிக்கை இல்லாததால் மீண்டும் அதிகரிக்கிறது

பல ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டியதால் பல ஊர்களில் ரோடு ஓரங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நடைபாதை கடைகள், கடைகளின் சன் ஷேடுகள், கட்டடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இதனால் நடைபாதைகளில் மக்கள் நடக்க முடியாமல் ரோட்டில் நடப்பதால் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக உள்ளது. அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், நகரில் ரோடுகள், நடைபாதைகள், கடைகளின் சன் ஷேடுகள் என உச்சகட்ட ஆக்கிரமிப்பில் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் எதையும் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து வந்த புகாரினால் நகரில் ஆக்கிரமிப்புகள் 3 கட்டமாக அகற்றப்படும் என கூறி, நெடுஞ்சாலை துறையினர் 2024 ஜூலையில் முதற் கட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பின்னர் 2 ம் கட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மார்க்கிங் செய்யப்பட்டது. அத்துடன் நெடுஞ்சாலை துறையினர் தங்கள் கடமையை முடித்துக் கொண்டனர். மீண்டும் அருப்புக்கோட்டையில் நடைபாதை, ரோடு ஓரங்களில் கடைகள் நீட்டிப்பு, கடைகளில் சன் ஷேடுகள் என ஆக்கிரமிப்புகள் தலைவிரித்து ஆடுகிறது. அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசியல் தலையீடு உள்ளதால் அதிகாரிகள் 2ம் கட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். இனி வரும் காலங்களில் சரஸ்வதி பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ள நிலையில் நகரில் மக்கள் கூட்டம் அதிகமாக வந்து செல்வர். போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் மாவட்டம் முழுவதும் விபத்துக்களை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை, நகராட்சிகள் இணைந்து ஆக்கிரமிப்புகளை தயக்கமின்றி அகற்ற உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ