உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  இழப்பீடு தொகையை கேட்டு பெட்ரோல் ஊற்றி மனைவி, குழந்தைகளை கொல்ல கணவர் முயற்சி

 இழப்பீடு தொகையை கேட்டு பெட்ரோல் ஊற்றி மனைவி, குழந்தைகளை கொல்ல கணவர் முயற்சி

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கிடைக்க போகும் இழப்பீடு தொகையை கேட்டு மனைவி, குழந்தைகள், மூதாட்டி உறவினர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொல்ல முயன்ற கணவரும் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூதாட்டி பலியானார். சிவகாசி முஸ்லிம் ஓடைத்தெருவைச் சேர்ந்தவர் செய்யது அலி பாத்திமா 40. இவருக்கும் முபாரக் என்பவருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து மகள் பர்வீன் பானு 18, மகன் செய்யது பாரூக் 15, உள்ளனர். முபாரக் பத்து ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்தார். செய்யது அலி பாத்திமா, இரு குழந்தைகள், அவரது மாமியார் சிக்கந்தர் பிலீயுடன் 65, ஒரே வீட்டில் வசித்து வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன் செய்யது அலி பாத்திமாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழும் அக்பர் அலிக்கும் 48, இரண்டாவதாக திருமணம் நடந்தது. இந்நிலையில் விபத்தில் இறந்த முபாரக்கிற்கு இழப்பீடு ரூ.11 லட்சம் கிடைக்க போவதாக தகவல் வெளியானது. அக்பர் அலி அந்தப்பணத்தை செலவிற்கு கேட்டார். அதை கொடுக்க மறுத்ததால் ஒன்றரை மாதங்களுக்கு முன் செய்யது அலி பாத்திமாவுடன் தகராறு செய்து சுத்தியலால் தலையில் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். அக்பர் அலியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஐந்து நாட்களுக்கு முன் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அக்பர் அலி மனைவி குழந்தைகளுடன் தங்கியிருந்து டவுன் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வந்தார். அவர் நேற்று முன் தினம் மீண்டும் இழப்பீட்டு தொகையை கேட்டு மனைவியுடன் தகராறு செய்தார். நேற்று காலை 6:00 மணிக்கு பெட்ரோல் கலந்த மண்ணெண்ணெய்யை வீட்டில் துாங்கிய மனைவி, அவரது மாமியார், இரு குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் அவர் மீதும் தீப்பற்றி வீட்டிலும் பரவியது. காயமுற்ற அனைவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிக்கந்தர் பீவி சிகிச்சை பலனின்றி இறந்தார். தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். சம்பவயிடத்தை டி.எஸ்.பி., அணில்குமார் ஆய்வு செய்தார். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தீக்காயத்துடன் கதறல்

மனைவி, குழந்தைகள் மீது தீ வைத்த அக்பர் அலி தன் மீதும் தீப்பற்றிய நிலையில் உடைகளை களைந்தபடி தீக்காயத்துடன் அருகில் உள்ள டவுன் போலீஸ் ஸ்டேஷனிற்கு தண்ணீர் கொடுங்கள் என கத்தியபடி வந்தார். பணியில் இருந்த மகளிர் போலீஸ் சத்யா, 108 ஆம்புலன்ஸிற்கு போன் செய்த நிலையில் அவ்வழியாக சென்ற டூவீலரை நிறுத்தி உடனடியாக அக்பர் அலியை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். பின் எதிரே வந்த ஆம்புலன்ஸில் அக்பர் அலி ஏற்றப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை