விருதுநகரில் சணப்பை செடி சாகுபடி அதிகரிப்பு
விருதுநகர்: விருதுநகரில் சணப்பை செடி சாகுபடி தொடர்ந்து அதிரித்து வருகிறது. இயற்கை பசுந்தாள் உரமாக இருப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிட்டு வருகின்றனர்.இயற்கை பசுந்தாள் உரங்களான சணப்பை, கொளிஞ்சி செடிகள் மண்ணிற்கான வளத்தை நேரடியாக கொடுக்கின்றன. இதில் சணப்பை செடியில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து இருப்பதால் தென்னை, வாழை, நிலக்கடலை, நெல், மிளகாய் பயிர்களுக்கு சிறந்த இயற்கை உரமாக பயன்படுத்தப்படுகிறது.புதர்செடியினமாக இருப்பதால் வேர்ப்பகுதியில் சத்துக்கள் அதிகம் நிரம்பி உள்ளது. சணப்பை, கொளிஞ்சி செடிகள் வளரும் இடத்தை அப்படியே டிராக்டரில் மடக்கி உழவு செய்வது வழக்கம்.நல்ல இயற்கை உரம் என்பதால் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் வளர்த்து வருகின்றனர். இந்த சணப்பை செடிகள் விதைத்து, 40 நாட்கள் வளர்ந்து, பூக்கும் காலத்தில் மடக்கி உழுவதன் மூலம் மண்ணுடன்கலந்து கரிம, கனிம சத்துக்கள் கிடைக்கும்.விவசாயிகள் கூறியதாவது:விருதுநகர், சுற்றிய பகுதிகளில் விளை நிலங்களில் அதிக அளவில் சணப்பை செடிகள் நடவு வளர்க்கப்படுகிறது. இந்த இயற்கை உரத்தால் மண்ணின் நீர் உறிஞ்சும் திறன் அதிகரித்து, ராசயன உரங்கள், பூச்சி மருந்துகளின் தேவை குறையும். மண்ணில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மேலும் பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக விளைச்சல் கிடைக்கும், என்றனர்.