விருதுநகர் மெயின் பஜாரில் ரோட்டை ஆக்கிரமிக்கும் கடைகள் அதிகரிப்பு; நகராட்சி, போலீசார் நடவடிக்கை தேவை
விருதுநகர்; விருதுநகர் மெயின் பஜாரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோடு வரை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பது அவசியமாகியுள்ளது. விருதுநகர், அதனை சுற்றியுள்ள பாண்டியன்நகர், கருப்பசாமி நகர், லட்சுமி நகர், என்.ஜி.ஓ., காலனி, சத்திரரெட்டியபட்டி, அல்லம்பட்டி, சிவஞானபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் விருதுநகர் மெயின் பஜாருக்கு வந்து தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர். இப்பகுதிகளில் கடைகள் நடத்தும் சிறு வியாபாரிகளும் தங்களுக்கு தேவையான பொருட்களை பஜாருக்கு வந்து வாங்கி செல்கின்றனர். இதனால் மெயின் பஜார் பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும். டூவீலர்களில் வருபவர்கள் தேசபந்து மைதானத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு பஜாருக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் பஜாரில் கடை வைத்துள்ள சில வியாபாரிகள் தங்கள் கடைகளில் இருந்து பொருட்களை ரோடு வரை வைத்து ஆக்கிரமித்திருந்தனர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போக்க நகராட்சி, போலீசார் இணைந்து வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ரோடு வரை ஆக்கிரமிக்கக்கூடாது என்பதற்காக ரோட்டில் கயிற்றை அடித்தனர். ஆனால் சில வியாபாரிகள் தற்போது வரை ரோட்டை ஆக்கிரமித்து பழக்கடைகள், காய்கறி கடைகளை வைத்துள்ளனர். இதனால் தற்போதும் தினசரி பஜாரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் முன்னேறி செல்ல முடியாமல் திணறுகின்றனர். எனவே விருதுநகர் நகராட்சி நிர்வாகம், போக்குவரத்து போலீசார் மெயின் பஜாரில் ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ள வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.