| ADDED : பிப் 16, 2024 04:39 AM
விருதுநகர்: விருதுநகர் நகராட்சியில் குப்பை பாயின்ட்கள் அதிகரித்து வருகின்றன. அதே போல் கட்டுப்படுத்த முடியாத அளவு பெருகி உள்ள திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடங்களால் சுகாதாரக்கேடும் அதிகரித்துள்ளது.விருதுநகர் நகராட்சியில் 36 வார்டுகளில் தனியார் மூலம் குப்பை பெறுகின்றனர். குப்பையை வாங்கி உரமாக்கல் மையங்களில் மக்கும் குப்பை மக்கா குப்பை என பிரிக்கப்பட்டு வருகிறது.துாய்மை பாரதம் திட்டத்தின் கீழ் குப்பையில்லா நகராட்சியாக எடுக்கப்பட்ட இந்த முன்னெடுப்பில் மக்கள் தெருவோரங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க தொட்டிகள் அகற்றப்பட்டன. கடை வியாபாரிகள் குப்பை கொட்டுவதை தடுக்க, மாலை இரவு நேரங்களில் குப்பை வாங்கப்பட்டன. இந்நிலையில் 2022ல் விருதுநகர் நகராட்சி துாய்மை பணிகள் அனைத்தும் தனியார் ஒப்பந்தத்திற்கு விடப்பட்டன.விடப்பட்ட நாள் முதல் தற்போது வரை குப்பை அள்ளுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. வாறுகால் சரிவர துாய்மைப்படுத்தப்படுவது கிடையாது. குப்பையை நேரடியாக வீடுகளில் வாங்கினாலும், தெருவோரங்களில் உள்ள குப்பை அகற்றப்படுவது கிடையாது. முன்பு போல் முழுவீச்சுடன் வியாபாரிகளிடம் குப்பை வாங்கப்படுவது கிடையாது என்ற அடுக்கடுக்கான புகார்கள் வருகின்றன.இதனாலேயே நகரின்பல பகுதிகளில் குப்பை பாயின்ட்கள் அதிகரித்தும் உள்ளன. காலையிலே வேலைக்கு செல்வோர் குப்பையை கொடுக்க முடியாததால் வாறுகாலில் கொட்டுகின்றனர். கிருஷ்ணமாச்சாரி ரோடு, சத்தியமூர்த்தி ரோடு, பாத்திமா நகர், பி1பி1 ரோடு, பி2பி2 ரோடு, காமராஜர் பைபாஸ் ரோடு என அனைத்து முக்கிய ரோடுகளில் குப்பை பாயின்டுகள் அதிகரித்து வருகின்றன.மக்களிடமும் பிரித்து கொடுப்பதற்கான விழிப்புணர்வு இல்லை. குப்பை வரி வசூலிப்பதால் நீங்களே பிரித்து கொள்ளுங்கள் என கூறுகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டையும் நகராட்சி நிர்வாகம் சரிவர கட்டுப்படுத்தவில்லை. இதனால் நகரின் குப்பை பாயின்டுகளில் அதிகம் இருப்பது பிளாஸ்டிக் குப்பை தான்.இதே போல் அறிவிக்கப்படாத சிறுநீர் கழிப்பிடங்களும் பெருகி உள்ளன. ரயில்வே பீடர் ரோடு ஊரணி, மதுரை ரோடு, பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றிய சந்துகள் என பலவற்றில் குப்பை அதிகரித்து வருகின்றன. இதனால் நோய் தொற்று, சுகாதாரக் கேடு அச்சம் ஏற்பட்டுள்ளது.நகராட்சி பகுதிகளில் குப்பை அள்ளுவதில் அவுட்சோர்சிங் விட்டும் பிரயோஜனமில்லை என குடியிருப்போர் குமுறுகின்றனர். நகராட்சியின் நிரந்த ஊழியர்கள் பணி செய்த போது கூட இந்த அளவு நகரில் குப்பை பெருகவில்லை.தற்போது அதிகரித்தள்ளது என புலம்புகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம்சுகாதாரக்கேடுக்கு வித்திடும் திறந்த வெளி சிறுநீர் கழிப்பிடங்களையும், அதிகரிக்கும் குப்பை பாயின்டுகளையும் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.