வெற்றி பயண பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தல்: விதிகளை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் வெற்றி பயண பஸ்களில் பணியாற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள் அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை தவறாமல் பின்பற்ற வேண்டும். அதனையும் மீறி புகார்கள் வரும் பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் அக். 2 முதல் வெற்றி பயணத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி அனைத்து டவுன் பஸ்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே இயங்கும் சாதாரண கட்டண பஸ்கள் வெற்றி பயண பஸ்களாக இயக்கப்படுகிறது. இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 9 டிப்போக்களில் இருந்து 51 பஸ்கள் வெற்றி பயண பஸ்களாக மாவட்டத்திற்குள் அனைத்து நகரங்களுக்கும்,மதுரை,கோவில்பட்டி, தென்காசி, விளாத்திகுளம், திருநெல்வேலி, சாயல்குடி நகரங்களுக்கும் இயக்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் இத்திட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் பெண் பயணிகள் தரப்பில் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதில் பஸ்களில் டிஜிட்டல் டிஸ்ப்ளே போர்டுகள் சரிவர தெரிவதில்லை, பஸ்கள் நேர கால அட்டவணைப்படி இயங்காமல் முன்கூட்டியும், தாமதமாகவும் செல்லுதல், வழித்தட பஸ் ஸ்டாப்புகளில் பெண் பயணிகளை ஏற்றாமல் அலட்சியமாக பயணித்தல், டிரிப்புகளை கட் செய்தல் உட்பட பல்வேறு புகார் எழுந்துள்ளது. விருதுநகரில் இருந்து எரிச்சநத்தம், அழகாபுரி வழியாக ராஜபாளையத்திற்கு இயங்கும் பஸ்களும், கோவில்பட்டியில் இருந்து சாத்துார், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக ராஜபாளையம் செல்லும் பஸ்களும் புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லாமல் பழைய பஸ் ஸ்டாண்டுடன் திரும்புவது, ராஜபாளையம் இரண்டாவது பணி மனையிலிருந்து வரும் ஒரு சில பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லாமல் சங்கரன்கோவில் முக்கு, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்வதும், மதுரை, அருப்புக்கோட்டையில் இருந்து வரும் போது ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை தான் செல்லும் என கூறுவதும், விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் வெற்றிப் பயண பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்ட் வராமல் செல்வதும்,ஸ்ரீவில்லிபுத்துாரில் உரிய நேரத்தில் புறப்படாமல் அட்வான்ஸாக செல்வது போன்றவைகள் நடந்து வருகிறது. அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டல மேலாண்மை இயக்குனர், பொது மேலாளர், கிளை மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதன்படி, பஸ்களில் டிஜிட்டல் டிஸ்ப்ளே பலகை தெளிவாக காட்சிப்படுத்த வேண்டும், அது இல்லாத பஸ்களில் வெற்றி பயணம் ஸ்டிக்கர் தெளிவாக ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். டிரைவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடம் மற்றும் கால அட்டவணையின் படி வழித்தட நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தி பெண் பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும். அவசரம் காட்டக்கூடாது. இதனை கண்டக்டர்கள் உறுதி செய்ய வேண்டும். பெண் பயணிகளுக்கு மரியாதையுடன் கண்டக்டர்கள் டிக்கெட் வழங்க வேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபடுவது, முறையற்ற வகையில் பேசுவது, நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். இதனை கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் மீது நடைமுறையில் உள்ள விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என அதில் தெரிவித்துள்ளார்