தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ., காப்பீட்டு அட்டை வழங்கல்
சிவகாசி: தினமலர் செய்தி எதிரொலியாக சிவகாசி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பணியாற்றும் 290 தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு இ.எஸ்.ஐ காப்பீட்டு திட்ட அட்டை வழங்கப்பட்டது.சிவகாசி மாநகராட்சியில் துாய்மை பணிகளை ஒப்பந்த நிறுவனம் செய்கிறது. 290 துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு பி.எப், இ.எஸ்.ஐ பிடித்தம் செய்ய வேண்டும் என்பது விதி. அதற்குரிய தொகை துாய்மை பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டாலும், இ.எஸ்.ஐ அட்டை, எண் வழங்கப்படாததால் பணியாளர்கள் தனியார் மருத்துவமனையில் பணம் செலுத்தி சிகிச்சை பெரும் சூழல் நிலவி வந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இ.எஸ்.ஐ., அட்டை வழங்க மாநகராட்சி நிர்வாகம், ஒப்பந்த நிறுவனத்திற்கு மாவட்ட நிர்வாகம்அறிவுறுத்தியது.இந்நிலையில் தினமலர்செய்தி எதிரொலியாக நேற்று 290 துாய்மை பணியாளர்களுக்கு பி.எப், இ.எஸ்.ஐ., அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கமிஷனர் சரவணன் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் வரலட்சுமி முன்னிலை வகித்தார். மேயர் சங்கீதா துாய்மை பணியாளர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இ.எஸ்.ஐ., அட்டை பெற்றதன் மூலம் இ.எஸ்.ஐ., அனைத்து உயர்தர சிகிச்சைகளையும் இலவசமாக பெறுவதுடன், விபத்து கால ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் துாய்மை பணியாளர்களுக்கு முழுமையாக கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.