ரேபிஸ் தடுப்பூசி போடாமல் விடுபட்டவர்களை கண்காணிப்பது அவசியம்; சுகாதார நிலையங்களை போல் அரசு மருத்துவமனைகளிலும்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்களில் நாய், பூனை, குரங்கு கடிக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி நான்கு டோஸ் செலுத்தாமல் விடுப்பட்டவர்களை கண்காணிக்கும் நடைமுறை உள்ளது. இந்த நடைமுறை அரசு மருத்துவமனைகளில் பின்பற்றப்படாததால் ரேபிஸ் தடுப்பூசி முழுமையாக செலுத்தாதவர்கள் எண்ணிக்கை உயர்ந்து உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 2 நகர, 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 114 துணை சுகாதார நிலையங்கள் உள்ளது. சிவகாசி சுகாதார மாவட்டத்தில் 5 நகர, 31 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 162 துணை சுகாதார நிலையங்கள் உள்ளது. மேலும் சட்டசபையில் மருத்துவம், மக்கள் நல்வாழ்த்துறை மானியக்கோரிக்கையினால் புதிதாக 22 துணை சுகாதார நிலையங்கள் அமைக்கும் பணிகள் தற்போது நடக்கிறது. மாவட்டத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தினசரி நாய்க்கடிப்பட்டவர்கள் ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். இந்த தடுப்பூசி கடிபட்ட முதல் நாளில் முதல் டோஸ், 3வது நாள் 2வது டோஸ், 7வது நாள் 3வது டோஸ், 28வது நாள் 4வது டோஸ் செலுத்த வேண்டும். இந்த நடைமுறை பூனை, குரங்கு, வெளவால் கடிக்கும் பொருந்தும். அரசு நகர, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தி அடுத்தடுத்த தவணைகள் செலுத்தாமல் விடுபட்டவர்களுக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது. ஆனால் அரசு மருத்துவமனைகளில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி குறிப்பிட்ட நாளில் அடுத்த தவணை தடுப்பூசி செலுத்தாமல் விடுப்பட்டவர்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படுவதில்லை. இதனால் குறிப்பிட்ட நாளுக்குள் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மீண்டும் முதலில் இருந்து நான்கு டோஸ் ரேபிஸ் தடுப்பூசியும் செலுத்த வேண்டியுள்ளது. மேலும் ரேபிஸ் தடுப்பூசி முழுமையாக செலுத்தாமல் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்கள் கழித்து தொற்று மீண்டும் உடலில் பரவி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது. இதை தடுக்க அரசு நகர, ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பது போல அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ரேபிஸ் தடுப்பூசி நான்கு டோஸ் முழுமையாக செலுத்தாமல் விடுப்பட்டவர்களுக்கு அலைபேசியில் அறிவுறுத்தல் வழங்கும் நடைமுறையை பின்பற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.