சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு, சேதமான மடைகள்
காரியாபட்டி: சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து கண்மாய் இருக்கும் அடையாளமே தெரியாமல் உள்ளது. மடைகள் சேதம் அடைந்ததால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயம் பாதிக்கப்பட்டதையடுத்து விவசாயிகள் கவலை அடைந்தனர். சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டி பாப்பனம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கண்மாய் 400 ஏக்கர் பரப்பளவில், 3 கி.மீ., சுற்றளவில், 5 மடைகளை கொண்டுள்ளது. 800க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல்களில் பாசனம் நடைபெறுகிறது. நீர்வரத்து ஆதாரமாக கம்பிக்குடி கண்மாய் நிறைந்து உபரி நீரும், பல்லவரேந்தல் காட்டுப் பகுதியில் பெய்யும் மழை நீரும் கண்மாய்க்கு வந்து சேரும். இதன் மூலம் கண்மாய் நிரம்பி விவசாயம் நடைபெறும். 15 ஆண்டுகளாக சரிவர மழை இல்லாமல் விவசாயம் செய்ய முடியாமல் தரிசு நிலங்களாக போடப்பட்டன. நாளடைவில் 4 மடைகள் சேதமடைந்தன. 3 ஆண்டுகளாக ஓரளவுக்கு மழை பெய்வதால் கண்மாய்க்கு தண்ணீர் வந்தது. இதனை நம்பி விவசாயிகள் நெல் நடவு செய்தனர். கண்மாய் மேடாகி, மடைகள் சேதமடைந்து, தண்ணீர் வீணாகி வருகிறது. இதனால் விவசாயம் முழுமையாக செய்ய முடியாமல் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஆக்கிரமிப்பு
சேகர், விவசாயி: கண்மாய் தூர்வாரி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகின. சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. ஆக்கிரமிப்பால் நிலப்பரப்பு குறைந்து வருகிறது. கம்பிக்குடி கண்மாயிலிருந்து வெளியேறும் உபரி நீர் வரும் வரத்துக் கால்வாய் காணாமல் போயின. கண்மாய்க்கு தண்ணீர் வருவது தடைபட்டுள்ளது. பலமுறை அதிகாரிகள் இடத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை சீமைக் கருவேல மரங்களால் சிக்கல்
வீரபத்திரன், விவசாயி: கண்மாய் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. கண்மாய் மேடாக உள்ளது. சேதமடைந்த மடைகள் வழியாக கண்மாய்க்கு வரும் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. விவசாயம் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். இருக்கிற தண்ணீரை கொண்டு நெல் நடவு செய்கிறோம். பால் பிடித்து கதிராகும் நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்படுகிறது. சீமைக் கருவேல மரங்களால் தண்ணீர் உறிஞ்சப்பட்டு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மீண்டும் விவசாயம் செழிக்க சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, கண்மாயை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, மடைகளை சீரமைக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படும்
ராஜேஷ்வரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்: விவசாயிகளின் கோரிக்கைகள் பரிந்துரைத்து அனுப்பப்பட்டுள்ளது. நிதி கிடைத்த உடன் விரைவில் சீமைக் கருவேல மரங்களை அப்புறப்படுத்தி, தூர்வாரி, மடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.