க.விலக்கு -- மறவர் பெருங்குடியில் உயர்மட்ட பாலம் அமைக்க விருப்பம்
திருச்சுழி: திருச்சுழி அருகே கமுதி விலக்கு - மறவர்பெருங்குடி இடையே உள்ள தரை பாலத்தை உயர் மட்ட பாலமாக அமைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திருச்சுழி அருகே கமுதி விலக்கு- - மறவர் மறவர் பெருங்குடி இடையே தரைப்பாலம் உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பகுதி மக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி பந்தல்குடி, சாத்தூர், இருக்கங்குடி, கோவில்பட்டி ஆகிய ஊர்களுக்கு வந்து செல்வர். அருப்புக்கோட்டை வழியாக சுற்றி செல்லாமல் குறைவான தூரத்தில் இந்த பாலம் இருப்பதால், இதை பயன்படுத்தி செல்கின்றனர். பாலத்தின் இருபுறமும் விவசாய நிலங்கள் ஏக்கர் கணக்கில் உள்ளது. பாலம் வழியாக விவசாயிகள் விவசாய பணிகள் செய்ய வந்து செல்வர். முக்கியமான இந்த பாலம் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாலத்தை மூழ்கடித்து விடுகிறது. இதை கடந்து செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இந்த பிரச்சனை தொடர்கதையாக உள்ளது. இந்தப் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க கோரி பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்தும் அரசு கண்டு கொள்ளவில்லை. இது குறித்து திருச்சுழி இந்திய கம்யூ.,ஒன்றிய செயலாளர் செல்வம் : மறவர் பெருங்குடி - கமுதி விலக்கு இடையே உள்ள தரை பாலத்தை உயர் மட்ட பாலமாக அமைக்க கோரி பல போராட்டங்கள் நடத்தியும் அரசு கண்டு கொள்ளவில்லை. மழைக்காலங்களில் விவசாயிகள், மக்கள் சிரமப்படுகின்றனர். உயர்மட்ட பாலம் அமைக்க தொகுதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.