ரேஷன் கடைகளில் வசதிகள் இல்லாததால்.. தவிப்பு: சேதமடைந்த கட்டடங்களாலும் பாதிப்பு
காரியாபட்டி: ரேஷன் கடைகளில் குடிநீர், கழிப்பறை, மின்சாரம் என போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் ஊழியர்கள் தவித்து வருகின்றனர். இவற்றில் சேதமடைந்த கட்டடங்களில் மழை நேரங்களில் கசிவு ஏற்பட்டு, கூரை உதிர்வதால் பொருட்கள் மீது கலந்து வினியோகிப்பதால் சண்டை ஏற்படுகிறது. தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மாவட்டத்தில் 961 ரேஷன் கடைகள் உள்ளன. 185 பகுதி நேர ரேஷன் கடைகள், 600 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் உள்ளனர். பெரும்பாலான கடைகளில் எடையாளர்கள் இருப்பது கிடையாது. மொத்தத்திற்கு 90 எடையாளர்களே பணியாற்றி வருகின்றனர். தேவைபட்டால் விற்பனையாளரே சம்பளம் கொடுத்து எடையாளர் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் விற்பனையாளரே அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும் என்ற நிலை தான் உள்ளது. மேலும், ஒரு விற்பனையாளரே 2, 3 கடைகளை கூடுதலாக கவனிக்க வேண்டியிருக்கிறது. பணிச்சுமையால் சிரமப்படுகின்றனர். சில இடங்களில் மட்டுமே அரசு கட்டடம், அதுவும் 15, 20, ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடமாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் வாடகை கட்டடத்தில் உள்ளன. தண்ணீர், மின்சாரம், மின்விசிறி, கழிப்பறை இருக்க வேண்டும். நுகர்வோர் உட்கார கடை முன் தாவாரம் இருக்க வேண்டும். இது போன்ற வசதிகள் பல கடைகளில் கிடையாது. ஒரு சில கட்டடங்களில் தான் மின்சாரமே இருக்கிறது. இதில் 40 சதவீத ஊழியர்கள் பெண்களாக உள்ளனர். கழிப்பறை வசதி இல்லாததால் இவர்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது. அரசு கட்டடங்கள் பெரும்பாலும் சேதமடைந்து, கூரை உதிர்ந்து, மழை நேரங்களில் கசிவு ஏற்பட்டு பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. அரிசி, சீனி உள்ளிட்ட பொருட்கள் மீது கலந்து விடுகிறது. விவியோகிக்கும்போது நுகர்வோர் பொருட்களை வாங்கி பார்த்து, விற்பனையாளர்களுடன் சண்டையிட்டு வருகினறனர். பகுதி நேர கடைகளுக்கும் நீண்ட துாரம் அலைய வேண்டியிருக்கிறது. பெண் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். அடிப்படை வசதியில் இல்லாததால் ஊழியர்கள் தவியாய் தவித்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அனைத்து கடைகளுக்கும் அரசு கட்டடம் கட்ட வேண்டும். தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.