ஆண்டாள் கோயில் கோபுரத்திற்கு மின்விளக்கு அலங்கார பணிகள்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ராஜகோபுரம், தங்க விமானம் உட்பட கோபுரங்கள் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யும் பணி துவங்கியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ராஜகோபுரம் தமிழக அரசின் முத்திரை சின்னமாக விளங்குகிறது. மேலும் ஆண்டாள் சன்னதியில் தங்க விமானம் அமைந்துள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். ராஜகோபுரத்தில் சாதாரண மின் விளக்குகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ள நிலையில் மின்விளக்குகளால் அழகு படுத்தப்பட வேண்டும் என பக்தர்கள் கோரி வந்தனர். கடந்த ஆண்டு சட்டசபை பட்ஜெட் அறிவிப்பில் ஆண்டாள் கோயில் கோபுரங்கள், தங்க விமானம் மின்விளக்குகளால் அழகு படுத்தப்படும் என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான பணிகள் துவங்குவதற்கு முன்னோட்ட பணியாக ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளை வெட்டி அகற்றும் பணி கடந்த மூன்று நாட்களாக நடந்தது. இதனையடுத்து ராஜகோபுரம், தங்க விமானம் உட்பட கோயில் வளாகத்தில் உள்ள கோபுரங்களுக்கு மின்விளக்கு அலங்காரம் செய்யும் பணி துவக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் சக்கரை அம்மாள் தெரிவித்தார்.