உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆகாயத்தாமரையால் மாசுபடும் கண்மாய்

ஆகாயத்தாமரையால் மாசுபடும் கண்மாய்

நரிக்குடி : நரிக்குடி என். முக்குளம் கண்மாய் முழுவதும் ஆகாயத்தாமரை வளர்ந்துள்ளதால் தண்ணீர் மாசுபட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தும் போது உடலில் அரிப்பு ஏற்படுவதால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். நரிக்குடி என். முக்குளத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் உள்ளது. 4 மடைகள் உள்ளன. 600க்கு மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். காட்டுப் பகுதியில் பெய்யும் மழை நீர் கண்மாய்க்கு வந்து சேரும். அவ்வாறு நிரம்பிய நீரில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து, நீர் மாசுபட்டு கருப்பு நிறமாக மாறி உள்ளது. இதனை விவசாயத்திற்கு பயன்படுத்தும் போது விவசாயிகளுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர். இதனை அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. விவசாயத்தைத் தொடர ஆகாயத் தாமரைகளை நிரந்தரமாக அப்புறப்படுத்தி, நீர் மாசுபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். துரைப்பாண்டி, விவசாயி: கண்மாய் தூர்வாரி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் மேடாக உள்ளது. மடைகள் சேதம் அடைந்தன. சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அத்துடன் கண்மாய் முழுவதும் ஆகாயத்தாமரைகள் வளர்ந்துள்ளன. தண்ணீர் மாசுபட்டு கருப்பு நிறமாக மாறி, அதிக அளவில் புழு பூச்சிகள் உண்டாகின. கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. ஏற்கனவே சீமைக் கருவேல மரங்களை வெட்ட ஏலம் விட்ட போது சில இடங்களில் உள்ள ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்தினர். மறுபடியும் கண்மாய் முழுவதும் வளர்ந்துள்ளன. விவசாயிகள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது. விவசாயத்தை தொடர வேண்டுமானால் கண்மாயை தூர்வாரி ஆகாயத்தாமரைகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை