அ.தி.மு.க., கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது
சிவகாசி : தேர்தலுக்கு 8 மாதங்கள்உள்ளதால், இன்னும் பல கட்சிகள் அ.தி.மு.க., கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது, என முன்னாள் அமைச்சர்ராஜேந்திர பாலாஜி கூறினார். சிவகாசியில் நடந்த தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் பேரணி ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழ்நாடு மக்கள் வருமானம் இன்றி தவித்து வரும்நிலையில் ஸ்டாலின் குடும்பம் தான் ஓரணியில் சுபீட்சமாக உள்ளனர். பா.ஜ., ஒன்றும் தீண்டத்தகாத கட்சி அல்ல. அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியை பார்த்து ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டதால் தான் எங்களை பற்றியே பேசி வருகிறார். தெற்கே, வடக்கே என பேசுவது, மொழி பிரச்னையை துாண்டி விடுவது என்பது தேர்தல் வரும்போது கருணாநிதி காலம் தொட்டு தி.மு.க., கடைபிடிக்கும் யுக்தி. தமிழக மக்கள் விழிப்புடன் உள்ளனர். 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி. தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் திருமாவளவன், இலங்கைத் தமிழர் படுகொலைக்கு காரணமாக இருந்த காங்கிரஸ், தி.மு.க., கூட்டணியில் தொடர்வது தான் ஒவ்வாத கூட்டணி. தி.மு.க., கூட்டணியில் பிரச்னை இருந்தால், திருமாவளவன் அ.தி.மு.க., கூட்டணிக்கு வந்தால் அவரை வரவேற்க தயாராக உள்ளோம். ஆக.,4, 5, 6ல் விருதுநகர் மாவட்டத்தில் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். தேசியத்தையும், தெய்வீகத்தையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி. பட்டாசு தொழிலை பயங்கரவாத தொழிலாக பார்க்கும் நிலை இந்த ஆட்சியில் உள்ளது. பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி விபத்து குறித்து ஆய்வு செய்து பிரச்னைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தொழிலை நசுக்குகின்ற வேலையை செய்தால் அ.தி.மு.க., நிச்சயம் எதிர்க்கும். தேர்தலுக்கு 8 மாதங்கள்உள்ளதால், இன்னும் பல கட்சிகள் அ.தி.மு.க., கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது, என்றார்.