மே 20 வேலை நிறுத்தம்; செவிலியர்கள் ஆதரவு
விருதுநகர் ; அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் மே 20ல் நடத்தும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் ஆதரவு அளிக்கிறது', என விருதுநகரில் பொதுச் செயலாளர் சுபின் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி அனைத்து தொகுப்பூதிய செவிலியர்களையும் பணி நிரந்தரம் செய்தல், உயர்நீதிமன்றம் உத்தரவின்படி எம்.ஆர்.பி., தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, வெளிப்படையான பணியிட மாற்ற கலந்தாய்வு உள்பட 25 கோரிக்கைகள் சென்னையில் நடந்த மாநில மாநாட்டில் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி செவிலியர்கள் தினமான நேற்று முதல் முதல்வர் ஸ்டாலினுக்கு அஞ்சல் அட்டைகள் தொடர்ந்து அனுப்பப்படுகிறது.மேலும் மே 20ல் பழைய ஓய்வூதிய திட்டம், பணிப்பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம் நடத்தும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்து பங்கேற்கப்படவுள்ளது.சென்னையில் ஜூன் 26ல் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடத்தவும், ஜூலை 17ல் சென்னை மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்குனர் அலுவலகத்தில் பெருதிரள் முறையீடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.