நோயாளிகளின் போர்வைகள், தலையணை உறைகள் சலவைக்கு ஸ்ட்ரெக்சரில் போகும் நிலை வாகன வசதிக்கான நடவடிக்கை தேவை
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் நோயாளிகள் பயன்படுத்திய போர்வைகள், தலையணை உறைகளை சலவைக்கு கொண்டுச்செல்ல வாகன வசதி இல்லை. இதனால் நோயாளிகளை அழைத்து செல்லும் ஸ்ட்ரெக்சரில் சலவை துணிகளை கொண்டு செல்லும் நிலையே நீடிக்கிறது. விருதுநகர் அரசு மருத்துவமனை 1276 படுக்கைகளுடன் செயல்படுகிறது. இங்குள்ள மகப்பேறு பிரிவிற்கு பிரசவம், குழந்தைகளுக்கான சிகிச்சை, கர்ப்பப்பை நோய்கள் உள்பட பல்வேறு பாதிப்புகளுக்காக பரிசோதனை, சிகிச்சைக்காக தினசரி நுாற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அரசு மருத்துவமனையின் வார்டுகளில் நோயாளிகள் பயன்படுத்தும் போர்வைகள், தலையணை உறைகளை தரைதளத்தில் சலவை செய்யும் இடத்திற்கு கொண்டு சென்று சலவை செய்து மீண்டும் அந்தந்த வார்டுகளுக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் மகப்பேறு பிரிவு வார்டுகளில் நோயாளிகள் பயன்படுத்திய போர்வைகள், தலையணை உறைகளை சலவைக்கு கொண்டு செல்ல முறையான வாகன வசதிகள் இல்லை. இதனால் ஒவ்வொரு வார்டுகளிலும் நோயாளிகளை அழைத்து செல்லும் ஸ்ட்ரெக் சரில் சலவை துணிகளை வைத்து ரோட்டை கடந்து கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஸ்ட்ரெக்சரில் வைத்து சலவை செய்த துணிகளை கொண்டு செல்ல முடியாமல் மண் தரையில் கீழே போட்டு மீண்டும் எடுத்து வைத்து செல்கின்றனர். இப்படி சலவை செய்தவற்றை அழுக்காக்கி கொண்டு செல்வதால், அவற்றை பயன்படுத்தும் நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற் பட்டுள்ளது. மகப்பேறு பிரிவு வார்டுகளில் சலவை செய்ய வேண்டிய துணிகள் அனைத்தையும் மொத்தமாக வாகனத்தில் ஏற்றி சலவை செய்யும் இடத்திற்கு கொண்டு வரவும், இங்கிருந்து சலவை செய்த துணிகளை மீண்டும் மொத்தமாக கொண்டு செல்ல வாகன வசதி இருந்தால் எளிதாக இருக்கும். எனவே மகப்பேறு பிரிவுகளின் வார்டுகளில் சலவை துணிகளை மொத்தமாக கொண்டு வந்து, மீண்டும் எடுத்துச்செல்ல வாகன வசதியை மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பது தேவையாக மாறியுள்ளது.