ரூ.415.45 கோடியில் மருத்துவ பணிகள் அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ.415.45 கோடியில் மருத்துவ உட்கட்டமைப்பு, புதிய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.மாவட்டத்தில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.5.95 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 14 மருத்துவ கட்டடங்களை கன்னிச்சேரிபுதுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவில் இருந்து காணொலி மூலமாக அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.இதில் அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: நம் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ. 415.45 கோடியில் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.புதிதாக செம்பட்டி, இலுப்பையூரில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது, என்றார்.அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசியதாவது: தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் ஆம்புலன்ஸ், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது, என்றார்.அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: காரியாபட்டி அரசு மருத்துவமனையில் நேற்று காலை ஆய்வு செய்த அமைச்சர் சுப்பிரமணியன், மகப்பேறு பிரிவிற்கு ஒரு நிரந்தர மருத்துவரை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளார், என்றார்.இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சுகபுத்ரா, எம்.எல்.ஏ.,க்கள் சீனிவாசன், ரகுராமன், கணேசன், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி, அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை டீன் ஜெயசிங், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா, விருதுநகர் நகராட்சி தலைவர் மாதவன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.