சிவகாசி மாநகராட்சியுடன் 9 ஊராட்சிகள் இணைப்பு
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியுடன் 9 ஊராட்சிகளை இணைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மக்கள் தொகை 2.70 லட்சமாகவும், மாநகராட்சி எல்லை 121 சதுர கிலோ மீட்டராக விரிவடைய உள்ளது.சிவகாசி நகராட்சியுடன் திருத்தங்கல் நகராட்சி, சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவர்குளம், சாமிநத்தம், செங்கமலநாச்சியார்புரம், ஆனையூர், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், அனுப்பன்குளம், பள்ளபட்டி, நாரணாபுரம் ஆகிய 9 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதில் ஊராட்சிகளில் மக்கள் பிரதிநிதிகள் பதவியில் இருப்பதால், முதற்கட்டமாக சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகள் மட்டும் இணைக்கப்பட்டு, 2021 அக். 21 ல் மாநகராட்சி செயல்பாட்டுக்கு வந்தது.9 ஊராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிகளின் பதவிக்காலம் வரும் டிச., மாதத்துடன் நிறைவடைய உள்ளதை அடுத்து, இந்த ஊராட்சிகள் சிவகாசி மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதன்படி தற்போது 1.26 லட்சமாக உள்ள மக்கள் தொகை(2011 கணக்கெடுப்பின் படி) 9 ஊராட்சிகளை இணைத்ததன் மூலம் 2.70 லட்சமாக உயர்ந்துள்ளது. மாநகராட்சி எல்லை 19.89 சதுர கிலோ மீட்டரில் இருந்து 121.80 சதுர கிலோ மீட்டராக விரிவடைந்துள்ளது.இதன் அடிப்படையில் மீண்டும் வார்டு மறுவரையறை செய்யப்பட்டு, தேர்தல் நடத்தப்பட உள்ளது. 33 வார்டுகளை கொண்ட சிவகாசி நகராட்சி, 21 வார்டுகளை கொண்ட திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு வார்டு மறுவரையறை செய்யப்பட்டது. அதன்பின் சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் தலா 24 வார்டுகள் என மொத்தம் 48 வார்டுகள் கொண்டதாக மாநகராட்சி உருவாக்கப்பட்டது.அதன் அடிப்படையில் 2022 ல் பிப்ரவரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதால் அரசியல் கட்சியினர் ஓட்டு சேகரிப்பதில் குழுப்பம் நிலவியது. மேலும் சிவகாசி பகுதியில் வார்டுகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக அதிருப்தி நிலவியது. இந்நிலையில் தற்போது மீண்டும் வார்டு வரையறை செய்யும் போது, தங்களது பகுதிகள் வேறு வார்டுக்கு சென்று விடுமோ என கவுன்சிலர்கள் அச்சத்தில் உள்ளனர்.