மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சும் மினரல் வாட்டர் நிறுவனங்கள்
சிவகாசி : மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதிக அளவில் போர்வெல் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சும் மினரல் வாட்டர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என சிவகாசியில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.சிவகாசி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., பாலாஜி தலைமை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:விஜயமுருகன், ஸ்ரீவில்லிபுத்துார்: மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். யானைகளை வனத்துறை விரட்டியும், அகழிகள் அமைத்தும் தீர்வு ஏற்படவில்லை. ஆர்.டி.ஓ.,: கோயம்புத்துார் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுவதை தடுக்க மேற்கொள்ளும் வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து வனத்துறை வழிமுறைகளை அளிக்க வேண்டும்.ஞானகுரு, மம்சாபுரம்: விவசாயிகள் கூட்டத்திற்கு தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வராமல், பெயருக்கு கீழ் நிலை அலுவலர்களை அனுப்பி வைப்பதால் உரிய பதில் கிடைப்பதில்லை.ஆர்.டி.ஓ.,: அடுத்த கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.அம்மையப்பன், வேப்பங்குளம்: வேப்பங்குளம் கிராமத்தில் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமச்சந்திரராஜா, ராஜபாளையம்: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதிக அளவில் போர்வெல் அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சும் மினரல் வாட்டர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.டி.ஓ.,: பொதுப்பணித்துறை, மின்வாரிய அதிகாரிகள் உடன் இணைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து துறை அதிகாரிகள் உடன் இணைத்து விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.மா விலை வீழ்ச்சி காரணமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் வேளாண் விற்பனைக்கூடம் மூலம் ஏல முறையில் விற்பனை செய்ய வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.