ரயில்வே ஸ்டேஷனுக்கு மினி பஸ் இயக்கம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே ஸ்டேஷனுக்கு பயணிகள் வந்து செல்ல வசதியாக நேற்று முதல் மினி பஸ் இயக்கப்பட்டுஉள்ளது.ஸ்ரீவில்லிபுத்துார் வழியாக மதுரை, மயிலாடுதுறை, சென்னை, எர்ணாகுளம், வேளாங்கண்ணி, கொல்லம், குருவாயூர், செங்கோட்டை நகரங்களுக்கு ரயில்கள் இயங்கி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.ஆனால் மக்கள் எளிதில் வந்து செல்ல பஸ் வசதி இல்லாததால் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. அரசு டவுன் பஸ்கள் அல்லது மினி பஸ்கள் இயக்க வேண்டுமென மக்கள் கோரி வந்தனர்.இந்நிலையில் புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க தமிழக அரசு பெர்மிட் வழங்கிய நிலையில், ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு காமராஜர் சிலை, சர்ச் சந்திப்பு, தேரடி, நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம் வழியாக ரயில்வே ஸ்டேஷன் வந்து அங்கிருந்து நீதிமன்றம், புதிய பஸ் ஸ்டாண்ட், மல்லி, முள்ளிக்குளம், கூனம்பட்டி, முத்துலிங்கபுரம் வழியாக மீனாட்சிபுரத்திற்கு ஒரு மினிபஸ் நேற்று முதல் இயக்கப்பட்டது. இதனை நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.தினமும் பாசஞ்சர் ரயில்கள் வரும் நேரத்தில் பயணிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் செல்ல வசதியாக இந்த மினி பஸ் இயக்கப்படுகிறது.