ஓட்டல்களில் விலைப்பட்டியலை கண்காணிப்பது .. அவசியம்: தேவைப்படுது உணவு பாதுகாப்புத்துறை ரெய்டு
மாவட்டத்தில் நகரங்கள், ரோட்டோரம் என பல பகுதிகளில் ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. உள்ளூர், வெளியூர் வாசிகள் பசியாற ஓட்டல்களுக்கு செல்கின்றனர். முதலில் விலைப்பட்டியல் இருக்கிறதா என்பதை உற்றுப் பார்க்கின்றனர். பெரும்பாலான ஓட்டல்களில் விலைப்பட்டியல் இருப்பது கிடையாது. அப்படியே இருந்தாலும் விலை நிர்ணயம் தெளிவின்றி எழுதப்பட்டிருக்கும். கையில் இருக்கும் பணத்தை வைத்து ஏதாவது சாப்பிட்டு பசியாறலாம் என நினைப்பவர்களுக்கு விலைப்பட்டியல் கண்ணில் படாதது ஒருவித தயக்கத்தை ஏற்படுத்துகிறது. இதைத்தொடர்ந்து பெரும்பாலான ஓட்டல்களில் உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் சூடு செய்து விற்பனை செய்கின்றனர். இதன் மூலம் உணவு விஷமாகி சாப்பிடுபவர்களுக்கு உடல் உபாதை ஏற்படுத்துவதுடன் பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர். இது ஒரு புறம் இருக்க புற்றீசல்கள் போல் ஆங்காங்கே தள்ளுவண்டி கடைகள், பேக்கரி கடைகள் திறக்கப்படுகின்றன. உணவு பொருட்களுக்காக செய்யப்படும் செலவுகளை மட்டுமே மனதில் கொண்டு கெட்டுப்போன உணவு பொருட்களை விற்பனை செய்யகின்றனர். அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் அதிக விலைக்கு உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும். விலைப்பட்டியல் மக்கள் பார்வைக்கு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து அபராதம் விதிப்பதுடன் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.