பட்டாசு ஆலைகளில் வருமான வரி சோதனை 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வு
சிவகாசி: சிவகாசியில் உள்ள பிரபல பட்டாசு ஆலை உரிமையாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள், டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் என 8 இடங்களில் 100க்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சிவகாசியில் நேற்று காலை 10:30 மணிக்கு பல்வேறு வாகனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உள்ள பட்டாசு ஆலை அலுவலகம் காமராஜர் ரோட்டில் உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்களின் 3 வீடுகள், வேலாயுத ரஸ்தா ரோட்டில் உள்ள மற்றொரு பட்டாசு ஆலை உரிமையாளர் வீடு, அலுவலகம், சிவகாமிபுரம் காலனி, திருத்தங்கல் ரோட்டில் உள்ள இரு டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் உட்பட 8 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனை நடக்கும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஓட்டலில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு, இரவு 7:00 மணிக்குப்பிறகும் சோதனை தொடர்ந்தது. வட மாநிலங்களில் நடந்த சோதனையின் போது சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சந்தேகம் இருந்ததால் இங்கும் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கு முன் 2008 ல் தீபாவளி நெருங்கும் நேரத்தில் சிவகாசியில் பட்டாசு தொடர்புடைய 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.