சாத்துார்-கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் குறுகலான பாலங்களால் விபத்து அபாயம்
சாத்துார்: சாத்துார் கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் குறுகலான பாலங்களால் விபத்து அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.விருதுநகர் நடுவப்பட்டி விலக்கு பாலம்,ஆர் ஆர் நகர் அர்ஜுனா நதி பாலம்,வெங்கடாசலபுரம் உப்பு ஓடை நதி பாலம், வைப்பாறு பாலம்,நல்லி சிங்கமடை அய்யனார் கோயில் சிற்றோடை பாலம்,பெரிய ஓடைப்பட்டியை விலக்கு பாலம் ஆகிய பாலங்கள் மிகவும் குறுகலான பாலங்களாக உள்ளன.நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட போது ஏற்கனவே இருந்த பைபாஸ் ரோடு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இதில் இருந்த பழைய பாலங்கள் அகலப்படுத்தப்படாமல் அப்படியே நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது.புதியதாக கட்டப்பட்ட நான்குவழிச் சாலை பாலங்களில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கும் மக்கள் நடந்து செல்வதற்கும் பிளாட்பார வசதி அமைக்கப்பட்டு இருக்கும். பழைய பாலங்களில் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கும் மக்கள் நடந்து செல்வதற்கு பிளாட்பார வசதியும் செய்யப்படவில்லை.இதனால் பழைய பாலங்கள் புதிய பாலங்களை விட அகலம் குறைவாக உள்ளன. இவற்றில் வேகமாக வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்த முற்படும்போது அகலம் குறைவான பாலத்தின் சுவற்றில் மோதி வாகனங்கள் விபத்திற்குள்ளாகி வருகின்றன.நான்கு வழிச்சாலையில் உள்ள இதுபோன்ற குறுகலான பாலங்களுக்கு முன்னால்விபத்து பகுதி என்றோ அல்லது குறுகலான பாலம் என்றோ எச்சரிக்கை பலகை வைக்கப்படவில்லை.இதனால் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் பாலத்தில் வேகமாக முந்த முற்படும்போது இருசக்கர வாகன ஓட்டிகள்மற்றும் முன்னால் செல்லும் வாகனங்களில் மீது மோதி அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் படுகாயம் அடைகின்றனர்.எனவே நான்கு வழிச்சாலையில் குறைகளாக உள்ள பாலங்களுக்கு முன்பாகவே எச்சரிக்கை பலகைகள் வைக்க நான்கு வழிச்சாலையில் நகாய் அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.