அலட்சியம்: குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது: நன்னீர் தேங்குவதால் டெங்கு அபாயம்
மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளுக்கு உள்ளூர் குடிநீர், தாமிரபரணி, ராஜீவ், வைகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மழைக் காலங்களில் அதிக மழை பெய்யும் போது வைகை, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிணறுகள் மூழ்கும் என்பதால் குடிநீர் சப்ளை நிறுத்தப்படும்.ஓரளவிற்கு வெள்ளம் வடிந்த பின் மீண்டும் இயக்கும் போது, அதிக அழுத்தம் காரணமாக ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்படும். இந்நிலையில் குடிநீர் சப்ளை செய்வது பாதிக்கப்படுகிறது. எப்படியாவது 7 நாட்கள் முதல் 10 நாட்களுக்கு ஒருமுறையாவது குடிநீர் சப்ளை செய்ய வேண்டிய கட்டாயத்தின் அடிப்படையில் உள்ளூர் குடிநீரையாவது சப்ளை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.ஆங்காங்கே ஏற்பட்டுள்ள குழாய்களில் உடைப்பு காரணமாக குடிநீர் வீணாகி வெளியேறும் போது அதை உள்ளாட்சி அமைப்புகள் உடனடியாக சரி செய்தனர். சமீப காலமாக குடிநீர் வீணாவதை உடனடியாக சரி செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். அவ்வாறு காலதாமதம் ஏற்படும் போது வீணாகும் குடிநீர் காலி நிலங்களில் தேங்குகிறது.திறந்த வெளியில் கிடக்கும் பிளாஸ்டிக், சிரட்டை, டயர், மட்டை உள்ளிட்ட கழிவு பொருட்களில் டெங்கு புழுக்கள் உற்பத்தி ஆகிறது. இதனை உடனடியாக தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் டெங்கு புழுக்கள் பருவமழை பெய்து ஆங்காங்கே மழைநீர் தேங்கி நிற்கும் நல்ல தண்ணீரில் கலந்து டெங்கு கொசு உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மழைநீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் பகலிலே கடிப்பதால் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி மக்களை அச்சுறுத்தி வருகிறது.எனவே டெங்குவை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் தீவிரம் காட்ட வேண்டும். குழாய் உடைப்பு கண்டறிந்தால் உடனடியாக சரி செய்ய முன்வர வேண்டும்.