டெண்டர் விட்டும் நடக்காத பணிக்காக 34 மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை
சிவகாசி: டெண்டர் விட்டும் ஓராண்டாகியும் நடக்காத பணிக்காக 34 மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை, என தி.மு.க. கவுன்சிலர் சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் தெரிவித்தார்.சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. மேயர் சங்கீதா தலைமை வகித்தார். துணை மேயர் விக்னேஷ்பிரியா, கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம்
ராஜேஷ் (ம.தி.மு.க.,): வணிகப் பயன்பாட்டு கட்டடங்கள், சொந்த பயன்பாட்டிற்கு மாற்றிய பின்னரும், பழைய முறையிலேயே வரி வசூல் செய்யப்படுகிறது. பல்வேறு வீடுகள் வணிகப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. வரிவிதிப்பு மற்றும் வரி வசூல் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை. எவ்வளவு வரி என்பதை இடைத்தரகர்கள் நிர்ணயம் செய்யும் நிலை உள்ளது.மேயர்: துணை முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு மாநகராட்சியில் வாரம் தோறும் சிறப்பு முகாம் நடத்தி 10 நாட்களில் தீர்வு காணப்படும். வீட்டு வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு என அனைத்து சேவைகளும் மக்களுக்கு அவர்கள் இடத்திற்கு சென்று வழங்கப்படும்.சரவணக்குமார், (தி.மு.க., ) : எனது வார்டில் சிறு பாலம், ரோடு உள்ளிட்ட பணிகளுக்கு டெண்டர் விட்டு பல மாதங்களுக்கு மேல் ஆகியும் பணிகள் தொடங்கவில்லை. இதுகுறித்து 34 முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.கமிஷனர்: நிதி பற்றாக்குறை காரணமாக பொது நிதியில் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் சேர்ந்து அரசுக்கு முறையிட்டால் கூடுதல் நிதிகளை பெற முடியும்.நிலானி, ( தி.மு.க. ): 17 வது வார்டில் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த ரயில்வே இடத்தில் வேலி அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் ரயில்வே துறையிடம் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.பாக்கியலட்சுமி (தி.மு.க.,): நகராட்சியில் ஒப்புதல் பெற்று கட்டப்பட்டுள்ள 45 வீடுகளின் அனுமதியை ரத்து செய்ய, நகர திட்டமிடுனர் மதியழகன் சென்னையில் சென்று அறிக்கை அளித்துள்ளார். மக்களுக்காக பணியாற்ற வேண்டிய அதிகாரி, தனி நபர்களின் சுயலாபத்திற்காக பணியாற்றி வருகிறார். இதனைத் தொடர்ந்து பெரும்பான்மையான கவுன்சிலர்கள் இதே குற்றச்சாட்டை கூறினர்.சேதுராமன், (தி.மு.க.,): மாநகராட்சியில் மொத்த வருவாயில் 50 சதவீதம் அளவுக்கு தனியார் குப்பை அள்ளும் நிறுவனத்திற்கு வழங்கப்படுகிறது. ஆனால் அவர்கள் போதிய பணியாளர்களை நியமிக்காமல் உள்ளதால் துாய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.கமிஷனர்: துாய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு இருமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.சாமுவேல் (சுயே.,): ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்திற்காக மாநகராட்சி பொது நிதியிலிருந்து 8 அங்கன்வாடி மையங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை உள்ள நிலையில் ஒரே நேரத்தில் அனைத்து கட்டடங்களும் கட்டுவதற்கு பதிலாக இரண்டு கட்டடங்களாக கட்டலாம். தவிர அப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு நிதியினை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.