நரிக்குடி பள்ளிகளில் குடிநீர் இல்லை அலையும் மாணவர்கள்
நரிக்குடி: நரிக்குடி பகுதிகளில் உள்ள துவக்க, நடுநிலை, உயர் நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். தற்போது வெயில் வாட்டி வதைத்து வருவதால் அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்கிறது. பெரும்பாலும் கிராமப்புற மாணவர்கள் பாட்டில்களில் குடிநீர் எடுத்து செல்வது கிடையாது. அதே போல் பெரும்பாலான பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லை. தண்ணீர் தாகம் எடுத்து, மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.குறிப்பாக நரிக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிநீர் வசதி இல்லாததால் அங்கிருந்து பஸ் ஸ்டாண்ட், பெட்ரோல் பங்க், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அலைந்து சென்று குடிநீர் கேட்கின்றனர். ஒரு சிலர் மனிதாபிமான அடிப்படையில் குடிநீர் கொடுக்கின்றனர். ஒரு சிலர் திட்டுவதால் மாணவர்கள் முகம் சுளிக்கின்றனர். அது மட்டுமல்ல தண்ணீருக்காக பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரியும் மாணவர்களால் உரிய நேரத்திற்கு வகுப்பறைக்கு செல்ல முடியாமல் போகிறது.இதனால் படிப்பு பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு குடிநீர் வசதி இல்லாத பள்ளிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.