அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில்செயல்படாத ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட் மத்திய அரசு நிதி பாழாகும் நிலை
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் கொரோனாவில் மத்திய அரசின் நிதியில் அமைக்கப்பட்ட தானியங்கி ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட் தற்போது செயல்படாமல் உள்ளது. இதில் ஏற்பட்ட பழுது பல மாதங்களாக சரிசெய்யப்படாததால் ஆக்ஸிஜன் பிளான்ட் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவுக்கு பரிசோதனை, சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகள், குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் வளாகத்தில் கொரோனாவின் போது கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு மூச்சுத்திணறலை சரிசெய்து சிகிச்சை அளிப்பதற்காக 2019 - 2020ல் மத்திய அரசின் நிதியில் காற்றில் இருந்து ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தானியங்கி பிளான்ட் அமைக்கப்பட்டது. இந்த பிளான்ட்டில் அடிக்கடி பழுது ஏற்பட்டு செயல்படாமல் போனதால் புதிய மருத்துவனையில் இருந்த இரண்டு திரவ ஆக்ஸிஜன் பிளான்டில் ஒன்றை மகப்பேறு பிரிவுக்கு மாற்றும் பணிகள் ரூ.18 லட்சத்தில் செய்து முடிக்கப்பட்டது. தற்போது புதிதாக 6 மாடிகளுடன் கட்டப்பட்ட மருத்துவமனை வளாகத்தில் காற்றில் இருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பிளான்ட் ஒன்றும், திரவ ஆக்ஸிஜன் பிளான்ட் ஒன்றும் செயல்படுகிறது. மகப்பேறு பிரிவில் திரவ ஆக்ஸிஜன் பிளான்ட் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. இங்குள்ள காற்றில் இருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பிளான்ட்டில் ஏற்பட்ட பழுதை சரிசெய்வதற்கான பணிகள் பல மாதங்களாகியும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஆக்ஸின் உற்பத்தி செய்யப்படாமலேயே உற்பத்தி பிளான்ட் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விருதுநகர் அரசு மகப்பேறு பிரிவில் பழுது ஏற்பட்டு பல மாதங்களாக செயல்படாமல் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி பிளான்ட் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் எடுக்க வேண்டும்.