ஒரு நாள் கருத்தரங்கம்
விருதுநகர்: விருதுநகரில் தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களுக்கு ரத்த சோகை, ஊட்டச்சத்து கல்வி குறித்த ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசியதாவது: கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக இருப்பதால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாகவும், ஊட்டச்சத்து குறைபாட்டுடனும் பிறக்கின்றனர். அதற்கு மிக முக்கிய காரணம் இளம் வயதில் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பதுதான்.அதனால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படுகிறது. இரும்பு சத்து அளவு குறைவாக இருக்கிறது. ஊட்டச்சத்து மிக்க உணவை நம் அன்றாட எடுத்துக்கொண்டோம் என்றால் நாம் மருந்துகளை சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காது, என்றார்.கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். மருத்துவக்கல்லுாரி முதல்வர் லலிதா, மாவட்ட திட்ட அலுவலர் தனலெட்சுமி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வாசுகி, அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்றனர்.