தடநீட்டிப்பு ரயில்களால் ஒரு புறம் வசதி; மறுபுறம் அவதி: அவசியமாகிறது கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகள்
ஸ்ரீவில்லிபுத்துார் : தெற்கு ரயில்வேயில் தடநீட்டிப்பு செய்யப்படும் முன்பதிவில்லா ரயில்களால் ஒரு புறம் மக்கள் பயனடைந்தாலும், மறுபுறம் போதிய பெட்டிகள் இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே அந்த ரயில்களில் கூடுதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பயணிகள் ரயில்கள் தட நீட்டிப்பு செய்து குறைந்த பெட்டிகளுடன் இயங்குகின்றன. இதனால் மக்கள் உட்கார இடமின்றி நின்று கொண்டும், கழிப்பறை அருகில் உட்கார்ந்தும் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.செங்கோட்டை - -மதுரை, மயிலாடுதுறை- - திண்டுக்கல் ரயில்களை இணைத்து செங்கோட்டை- - மயிலாடுதுறை ரயிலாக தட நீட்டிப்பு செய்து இயக்கப்படுவதன் மூலம் தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்ட மக்கள் திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு சென்று வர கூடுதல் ரயில் வசதி கிடைத்துள்ளது. ஆனால் இந்த ரயிலில் 10 பெட்டிகள் மட்டுமே உள்ளதால் ராஜபாளையத்தில் இருந்து மதுரை வரை பயணிகள் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இதே நிலை மறு மார்க்கத்திலும் காணப்படுகிறது. குருவாயூர் - -புனலுார், மதுரை- - செங்கோட்டை ரயில்களை இணைத்து குருவாயூர் -- செங்கோட்டை ரயிலாக இயக்கப்படும் நிலையில் கேரள மக்கள் அதிகளவில் தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டங்களுக்கு வந்து செல்கின்றனர் இதனால் இந்த மாவட்ட மக்கள் தென்காசியில் இருந்து மதுரை வரை நின்று கொண்டே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.தற்போது புனலுாரில் இருந்து மதுரை வரை இயங்கிய இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் வரை தடநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.இதேபோல் மயிலாடுதுறை -திருச்சி ரயில், பாலக்காடு -ஈரோடு ரயில் இணைக்கப்பட்டு திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட உள்ளது. இதனால் மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டம், கேரள மக்கள் பயனடைவர்.ஆனால் இவ்வாறு தடநீட்டிப்பு செய்யப்படும் ரயில்களில் 10 பொதுப் பெட்டிகள் மட்டுமே இருப்பதால் வழித்தடத்தில் உள்ள நகரங்களை சேர்ந்த மக்கள் உட்கார இடம் இன்றி நின்று கொண்டே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே தட நீட்டிப்பு செய்யப்படும் ரயில்கள் குறைந்த பட்சம் 16 முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்குவதற்கு தெற்கு ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தடநீட்டிப்பு செய்யப்படும் ரயில்களில் 10 பொதுப் பெட்டிகள் மட்டுமே இருப்பதால் வழித்தடத்தில் உள்ள நகரங்களை சேர்ந்த மக்கள் உட்கார இடம் இன்றி நின்று கொண்டே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.