வெங்காய பயிர் நடவு தீவிரம்
காரியாபட்டி: காரியாபட்டி சீகனேந்தல் பகுதியில் மழை பெய்து வருவதால் வெங்காய பயிர் நடவில் விவசாயிகள் தீவிரமாக உள்ளனர். காரியாபட்டி சீகனேந்தல், அரசகுளம், குரண்டி, மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் தோட்ட விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தோட்ட நிலங்கள், மானாவாரி நிலங்களில் காலத்திலும், கோடையிலும் வெங்காயம் பயிரிடுவர். கோடை வெங்காய பயிர்கள் அறுவடை செய்த பின் நிலத்தை உழுது பக்குவப்படுத்தி தயார் நிலையில் வைத்திருந்தனர். தற்போது வடகிழக்கு பருவ மழை அவ்வப்போது பெய்து வருகிறது. நீர் நிலைகள் நிரம்பி வருவதுடன் நிலங்கள் விதைப்புக்கு பக்குவமாக இருந்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதியில் அதிக அளவில் வெங்காயம் பயிரிடுவதில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.கருப்பசாமி, விவசாயி: இப்பகுதியில் இரு போகம் வெங்காய விவசாயம் நடைபெறும். அதிக மழை இதற்கு தேவையில்லை. ஓரளவிற்கு பெய்தாலே போதுமானது. நல்ல விளைச்சல் கிடைக்கும். ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை செலவாகும். வெங்காயத்திற்கு ஒரு சில நேரங்களில் கிராக்கி இருக்கும். அப்போது அதிக லாபம் கிடைக்கும். நல்ல விலை கிடைக்கும் போது விற்பனைக்கு கொண்டு செல்வோம். குறுகிய கால பயிர் என்பதால் தொடர்ந்து செய்ய முடிகிறது. தற்போது ஓரளவிற்கு மழை பெய்து வருவதால் வெங்காய பயிர் பயிரிடுவதில் தீவிரமாக உள்ளோம்.