| ADDED : ஜன 14, 2024 11:54 PM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் அலைபேசி, டூவீலர் திருட்டு சம்பவங்கள் நடந்தால் பாதிக்கப்பட்டவர்கள் வெளியூரில் இருக்கும் போது போலீசில் ஆன்லைன் புகார் அளிக்கின்றனர். இப்படி கொடுக்கப்படும் ஆன்லைன் புகார்கள் மீது தாமதமாக நடவடிக்கை எடுப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் குமுறுகின்றனர்.மாவட்டத்தில் அலைபேசி, டூவீலர் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த திருட்டில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூரில் இருந்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிற்கு நேரில் சென்று புகார் அளிக்கின்றனர். ஆனால் வெளியூரில் இருக்கும் பட்சத்தில் ஆன்லைனில் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து புகார் அளிக்கின்றனர்.இது குறித்து வேலைகளை விட்டு விட்டு நேரில் சென்று கேட்டாலும் நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றனர். ஆனால் திருடு போனது திருடு போனதாகவே உள்ளது. இப்படி ஆன்லைன் வழியாக அளிக்கப்படும் புகார்கள் மீதான நடவடிக்கையை போலீசார் தாமதமாக துவங்குவதாக பாதிக்கப்பட்டோர் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.அலைபேசி திருட்டுக்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அலைபேசிகள் மீட்கப்பட்டாலும், அதிகமாக நடக்கும் இத்திருட்டில் திரும்ப கிடைப்பது சொற்பமே. மேலும் அலைபேசியை பறிகொடுத்தவர்கள் ஐ.எம்.இ.ஐ., எண்ணை வைத்து புகார் அளித்தாலும் அதை தொடர்ந்து கண்காணித்து பறிமுதல் செய்வதில் போலீசார் தயக்கம் காட்டுகின்றனர். டூவீலர் திருட்டுக்களில் பறிகொடுத்தவர்களும் இதே நிலையே தொடர்கிறது.திருட்டு டூவீலரை வைத்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதால் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசாரும் திண்டாடுகின்றனர். எனவே செல்போன், டூவீலர் திருட்டு வழக்கில் ஆன்லைன் வழியாக அளிக்கப்படும் புகார்களுக்கு போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்கின்றனர்.