உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிராமங்களில் முன்னேற்பாடு இல்லாததால் தண்ணீர் தட்டுப்பாடு

கிராமங்களில் முன்னேற்பாடு இல்லாததால் தண்ணீர் தட்டுப்பாடு

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 40 ஊராட்சிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளில் 80 க்கு மேற்பட்ட கிராமங்களும் அடங்கியுள்ளன. இந்த கிராமங்களுக்கு ஊராட்சி மூலம் போர்ெவல் அமைத்து தண்ணீர் வழங்கப்படுகிறது. குடிப்பதற்கு தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் நடக்கிறது. பெரும்பாலான கிராமங்களில் நிலத்தடி நீர் வற்றி போனதால் ஊராட்சிகள் மூலம் வழங்கப்படும் தண்ணீர் வருவது இல்லை. கொட்டகாச்சியேந்தல், இறைச்சின்னப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் குடிநீருக்கு மக்கள் அலைகின்றனர். கோடை காலம் என்பதால் தண்ணீரின் தேவை அதிகமாக உள்ளது. தேவைக்கு ஏற்ப ஊராட்சிகள் முறையான முன்னேற்பாடுகளை செய்யாததால் பல கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள மேல்நிலைத் தொட்டிகள் முறையான பராமரிப்பு இல்லை. கீழ குருணை குளம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை தொட்டி கசிந்து ஏற்றப்படும் தண்ணீரும் வெளியேறி விடுகிறது. இங்கும் மக்கள் தண்ணீரை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25 முதல் ஊராட்சி நிர்வாகம் இல்லாததால், அந்தந்த ஊராட்சிகளில் அடிப்படை வசதியான குடிநீர் விநியோகம் முறையாக இல்லை. கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க புதிய போர்வெல் அமைத்தல், பழுதான அடிகுழாய்களை சரி செய்தல், மேல்நிலைத் தொட்டிகளை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதனால் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கிராமங்களைச் சென்றடையும் வகையில் பல கோடி ரூபாய் செலவில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், இந்திரா காந்தி குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தினாலும் கடைக்கோடி கிராம மக்கள் பயன் பெறு வகையில் திட்டங்கள் கொண்டு செல்லப்படவில்லை. இதனால் மக்கள் குடிப்பதற்கும் புழக்கத்திற்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.தண்ணீருக்கு என மாதம் ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 2 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கோடை காலமாக இருப்பதால் தண்ணீருக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதுகுறித்து, ராம்பாண்டியன், கூறுகையில், அரசு அனைத்து வரி இனங்களிலும் வசூல் செய்கிறது. ஆனால் தண்ணீர் வழங்க வேண்டிய அவற்றில் மட்டும் பொறுப்பை கை கழுவி விடுகிறது. உள்ளூர் நீர் நிலைகளை முறையாக பராமரிப்புச் செய்தாலே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து அந்தந்த கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கலாம். போர்வெல் அமைத்தாலும் தண்ணீர் பிரச்சனை இருக்காது. அரசு அனைத்து வீடுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட ஆர்.ஓ., மெஷின் வழங்கலாம். இதனால் வீடுகளில் சுயசார்பு முறையில் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் கிடைக்கும் என்பதை உறுதி செய்யலாம். தண்ணீர் தட்டுப்பாடும் நீங்கும். அரசு இனிமேலாவது அனைத்து நீர் நிலைகளையும் பராமரித்து மழை நீரை சேகரிக்க வழி செய்ய வேண்டும்.- - -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை