உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோடு ஓரத்தில் திறந்தவெளி கிணறுகள்: விபத்து அச்சம் மாவட்ட நிர்வாக நடவடிக்கை தேவை

ரோடு ஓரத்தில் திறந்தவெளி கிணறுகள்: விபத்து அச்சம் மாவட்ட நிர்வாக நடவடிக்கை தேவை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட திறந்த வெளி கிணறுகள் ரோடு ஓரங்களில் உள்ள கிணறுகளால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் தொடர்ந்து பயணித்து வருகின்றனர். இது குறித்து நிரந்தரமான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்.விருதுநகரில் வி.எம்.சி., காலனியில் இருந்து புல்லலக்கோட்டை செல்லும் ரோட்டில் திறந்த நிலையில் பெரிய கிணறு உள்ளது. இந்த கிணறு மக்கள் பயன்பாட்டில் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாமல் இருந்தும் நிரந்தரமாக மூடுவதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் நகராட்சி நிர்வாகம் எடுக்கவில்லை.மேலும் ரோசல்பட்டி ஊராட்சியின் அரண்மனை கண்மாய் அருகே குமாரபுரம், இந்திராகாலனிக்கு செல்லும் ரோட்டில் திறந்த நிலையில் கிணறு பல ஆண்டுகளாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.

சிவகாசி

சிவகாசி கங்காகுளத்தில் தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் ரோட்டோரத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கிணறு உள்ளது. எப்போதுமே தண்ணீர் நிறைந்திருக்கும் இந்த கிணற்றில் தடுப்பு சுவர்கள் சேதம் அடைந்த நிலையில் திறந்த நிலையில் உள்ளது. சாட்சியாபுத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வருவதால் இந்த ரோடு முக்கிய மாற்றுப் பாதையாக உள்ளது.தாலுகா அலுவலகம் வருபவர்கள், பள்ளி கல்லுாரி பஸ்கள் என எப்பொழுதுமே இந்த ரோட்டில் போக்குவரத்து நிறைந்திருக்கும். தவிர கிணற்றின் அருகே உள்ள குடியிருப்புகளுக்கு டூவீலரில் செல்பவர்கள் கிணறை ஒட்டித்தான் கடந்து செல்ல வேண்டி உள்ளது. கொஞ்சம் கவனம் சிதறினாலும் கிணற்றில் விழ வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் தெரு விளக்குகளும் இல்லாததால் இருளில் நடமாடுவதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர்.குழந்தைகள் சிறுவர்கள் விபரீதம் அறியாமல் கிணற்றின் அருகிலேயே விளையாடுகின்றனர். மேலும் இப்பகுதி சிறுவர்கள் கிணற்றில் தான் குளிக்கின்றனர்.எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு கிணற்றில் தடுப்புச்சுவர் ஏற்படுத்தி மூடி அமைக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சட்டி கிணறு நான்கு வழிச்சாலை ஒட்டி உள்ள திறந்த வெளி கிணறு பகுதி வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பதுடன் அபாய எச்சரிக்கை பலகை அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை