மேலும் செய்திகள்
காலிப்பணியிடங்களால் தவிக்கும் ஊராட்சி செயலர்கள்
16-Jan-2025
காரியாபட்டி : ஊராட்சி அலுவலகத்தில் எழுதப்பட்ட முன்னாள் தலைவர்களின் பெயர்களை அகற்ற சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், செயலர்கள் தவிர்த்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்களின் பதவிக்காலம் சென்ற ஜன.5ல் முடிவடைந்தது. அடுத்து தேர்தல் நடக்கும் வரை பி.டி.ஓ.,கள், ஊராட்சி செயலர்கள் மக்களுக்கு தேவையான பணிகளை செய்து வருகின்றனர். முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் நிர்வாகத்தில் தலையிட முடியாது. அப்படி இருந்தும் பெரும்பாலான இடங்களில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் நிர்வாகங்களில் தலையிட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதைத் தொடர்ந்து ஊராட்சி செயலர்களுக்கான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. அதில் ஊராட்சி அலுவலகங்களில் எழுதப்பட்டுள்ள தலைவர்களின் பெயர்களை அகற்றி பி.டி.ஓ.,கள், செயலர் பெயர், அலைபேசி எண்ணை எழுதி மக்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அந்த அடிப்படையில் காரியாபட்டி பகுதியில் உள்ள அலுவலகங்களில் முன்னாள் ஊராட்சித் தலைவர்களின் பெயர்களை ஊராட்சி செயலர்கள் அழித்தனர். இதற்கு பெரும்பாலான இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது. பலர் சண்டையிட்டு வருகின்றனர். இதனால் ஊராட்சி செயலர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அடுத்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தலைவராகும் பட்சத்தில் ஊராட்சி செயலர்களை பழி வாங்குவார்களோ என்கிற எண்ணம் பலருக்கு ஏற்படுவதால் அழிக்க தயங்குகின்றனர்.பிரச்னைக்குரிய இடங்களை கண்டறிந்து முன்னாள் ஊராட்சித் தலைவர்களின் பெயர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் பெரும்பாலானவர்கள் வாகனங்களில் ஊராட்சி தலைவர்கள் என பெயர் பலகை வைத்து வலம் வருகின்றனர். அதனையும் கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
16-Jan-2025