ஊராட்சி பேட்டரி ஆட்டோக்கள் கிடப்பில் போட்டதால் வீணாகும் நிதி
காரியாபட்டி : காரியாபட்டியில் துாய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஊராட்சிகளில் குப்பை சேகரிக்க வாங்கப்பட்ட பேட்டரி ஆட்டோக்கள், வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. துருப்பிடித்து வீணாகி வருவதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. காரியாபட்டி ஒன்றியத்தில் ஊராட்சிகளில் குப்பை சேகரிக்க துாய்மை பாரத இயக்கத்தின் கீழ் பேட்டரி ஆட்டோக்கள் வாங்கப்பட்டன. காரியாபட்டி ஒன்றியத்தில் 36 ஊராட்சிகள் உள்ளன. இதில் முதல் கட்டமாக 31 ஊராட்சிக்கு புதிய பேட்டரி ஆட்டோக்கள் 3 மாதங்களுக்கு முன் ஒன்றிய அலுவலக வளாகத்தில் வாங்கி நிறுத்தப்பட்டது. ஆர்.டி.ஓ., நம்பர் வாங்க ஒரு சில நாட்கள் ஆகின. தற்போது நம்பர்கள் வழங்கப்பட்டு பிளேட்டுகள் வாகனங்களில் பொருத்தப்பட்டன. இதுவரை ஊராட்சிகளுக்கு வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஒரு வாகனத்தின் விலை ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம். இதில் ஊராட்சி நிதி ரூ 75 ஆயிரம், துாய்மை பாரத இயக்க நிதி ரூ. 2 லட்சம். மழை, வெயிலுக்கு பாதுகாப்பு இல்லாமல் திறந்தவெளியில் கிடப்பதால் துருப்பிடித்து வீணாகி வருகிறது. குப்பை அள்ள பக்கெட்டுகள் வாங்கப்பட்டன. வாகனத்தில் வைக்கப்பட்டுள்ளதால் காணாமல் போகும் சூழ்நிலை உள்ளது. நாளாக, பேட்டரிகள் வீணாகும் நிலை உள்ளது. விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.