விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட்டிற்குள் இரவில் செல்லாமல் திரும்பும் பஸ்கள் பயணிகள் ஏமாற்றம்
விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிற்குள் இரவில் சிவகாசி, கோவில்பட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் செல்லும் பஸ்கள் முறையாக செல்லாமல் திரும்புகின்றன. இதனால் பயணிகள் காத்திருந்து ஏமாற்றமடைந்து வருகின்றனர்.விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் கடந்தாண்டு ஆக. 21ல் இருந்து செயல்பாட்டுக்கு வந்தது. இங்கிருந்து சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார் உள்பட புறநகர் பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் கோவில்பட்டி, சாத்துார், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துாரில் இருந்து புறப்பட்டு விருதுநகர் வழியாக மதுரை செல்லும் பஸ்கள் புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவை காலை, மதியம், மாலை நேரங்களில் சரியாக வந்து செல்கின்றன. ஆனால் இரவில் புது பஸ் ஸ்டாண்டிற்குள் முறையாக வந்து செல்வதில்லை. இது குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் புது பஸ் ஸ்டாண்டிற்குள் இரவில் பஸ்சிற்காக காத்திருப்பவர்கள் ஏமாற்றம் அடையும் நிலை உண்டாகியுள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் இரவில் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிற்குள் முறையாக வந்து செல்லாத பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ்கள் அனைத்து நேரங்களில் உள்ளே வந்து செல்வதை கண்காணிக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.