தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு அபராதம்
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் தமிழில் பெயர் பலகை வைக்காத 28 கடைகள் வணிக நிறுவனங்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் ரூ. 56,000 அபராதம் விதித்துள்ளார்.தமிழ்நாடு கடைகள் நிறுவனங்கள் சட்ட விதிகள் படி நிறுவனம், கடை, தொழிற்சாலைகளின் பெயர் பலகை தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும். பிற மொழிகளும் உபயோகிக்கப்பட்டு இருந்தால் பெயர் பலகையில் பிரதானமாகவும் முதல் இடத்திலும் தமிழ் மொழி இருக்க வேண்டும். இரண்டாவது இடத்தில் ஆங்கிலத்திலும், இதர மொழிகள் மூன்றாவது இடத்திலும் எழுதப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு அபராத தொகை ரூ. 50 லிருந்து ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது.இந்நிலையில், ராஜபாளையத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மைவிழி செல்வி உதவி ஆய்வாளர் பிச்சை கனி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் தமிழில் பெயர் பலகை வைக்காத 28 கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ. 2000 விதம் ரூ. 56 ஆயிரம் அபராதம் விதித்துள்ளார். விதிப்படி பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.