குன்னுார் ஊராட்சியில் நுாறு நாள் வேலை வழங்குவதில் பாரபட்சம் மக்கள் குற்றச்சாட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் குன்னுார் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பதிவு செய்த அனைவருக்கும் வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும், அனைவருக்கும் வேலை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் குன்னூர் ஊராட்சி அதிக வருவாய் கொண்ட ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள கிருஷ்ணன் கோவில் போக்குவரத்து நகரில் குடியிருப்போர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. ஆனால் அடிப்படை வசதிகள் செய்து தருவதில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக போக்குவரத்து நகர் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்த அனைவருக்கும் முறையாக வேலை வாய்ப்பு வழங்காமல், பாரபட்சம் காட்டுவதாகவும் இதனால் பல பேர் வேலை வாய்ப்பு கிடைக்காமல் வருவாய் இழப்பிற்கு ஆளாகி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.எனவே, மாவட்ட நிர்வாகம்அனைத்து பயனாளிகளுக்கும் சரியான முறையில் வேலைகள் முறையாக வழங்குவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.