அச்சங்குளத்தில் ரோடு, வாறுகால் கழிப்பறையின்றி மக்கள் அவதி
சாத்துார்: வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அச்சங்குளத்தில் அடிப்படை வசதிகளான ரோடு, வாறுகால், கழிப்பறை வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சல்வார் பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது அச்சங்குளம். இங்கு மூன்று தெருக்கள் உள்ளன. ஒரு தெருவில் மட்டுமே பேவர் பிளாக் ரோடு போடப்பட்டு உள்ளது . மற்ற இரண்டு தெருக்களிலும் ரோடு வசதி இல்லை.ரோடு கரடு முரடாக குண்டு குழியுமாக உள்ளதால் இங்கு வசிக்கும் மக்கள் மழைக்காலத்தில் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.மேலும் இங்கு கழிப்பறை வசதி இல்லை. சாலையோர பகுதியை திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர் . இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.அச்சங்குளத்தில் இருந்து இரவார் பட்டிக்கு வைப்பாறு வழியாக செல்ல ஒரு பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலமும் இடிந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. பாலம் இடிந்து போனதால் இப்பகுதி மக்கள் சிவகாசிக்கு செல்ல 30 கிலோமீட்டர் துாரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.இங்கு பொது சுகாதார வசதி, ஆற்றுப் பாலம், ரோடு வசதி மற்றும் கழிவு நீர் செல்ல வாறுகால் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.