பராமரிப்பின்றி கருகி வரும் குறுங்காடு நடவடிக்கை எடுக்க மக்கள் எதிர்பார்ப்பு
காரியாபட்டி: காரியாபட்டி தாமரைக்குளத்தில் ரூ.பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட குறுங்காடு போதிய பராமரிப்பின்றி கருகி வருவதால் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டி தாமரைக்குளம் பகுதியில் ஏராளமான அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. இங்குள்ள நிலங்கள் பொட்டல் தரையாக இருப்பதால் விவசாயம் சரி வர செய்ய முடியவில்லை. இதையடுத்து அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து குறுங்காடுகள் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் செட்டிகுளம், எசலிமடை, தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ரூ. பல லட்சங்கள் செலவு செய்து குறுங்காடுகள் உருவாக்கப்பட்டன. செட்டிகுளம், எசலிமடையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நன்கு வளர்ந்து குறுங்காடுகள் செழிப்பாக உள்ளன.தாமரைக்குளத்தில் போதிய பராமரிப்பு இல்லாததால் செடிகள் வளர்ச்சி அடையாமல் கருகி வருகின்றன. குறிப்பாக தென்னை கன்றுகள் ஏராளமாக வைக்கப்பட்டன. நன்கு வளர்ந்து வந்த நிலையில் போதிய பராமரிப்பின்றி கருகி வருகின்றன. பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.