காரியாபட்டி பிசிண்டியில் குரங்கு கடித்து மக்கள் பாதிப்பு
காரியாபட்டி: காரியாபட்டி பிசிண்டியில் குரங்கு பலரை கடித்து வருவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். வனத்துறையினர் குரங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர் பார்க்கின்றனர். காரியாபட்டி பிசிண்டியில் ஒரு குரங்கு மட்டும் சுற்றித்திரிகிறது. பெண்களை கண்டதும் தாவி பிடித்து விளையாடுவது, பயந்து ஓடுபவர்களை கடிப்பது என உள்ளது. சிறுவர்களை கண்டதும் துரத்திப் பிடித்து கடித்ததில் விமல், கவியரசு, ஓவக்காள், தனலட்சுமி, அஸ்வின், செண்பகவள்ளிக்கு காயம் ஏற்பட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வர தயங்குகின்றனர். வீட்டுக்கு வீடு தாவி பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பலர் பாதிக்கப்படும் முன் தனியாக சுற்றி திரியும் குரங்கை பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.