உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / உவர்ப்பு நீர், மண்ரோடு, முடிவுபெறாத வாறுகால் விருதுநகர் பாலம்மாள் நகர் மக்கள் அவதி

உவர்ப்பு நீர், மண்ரோடு, முடிவுபெறாத வாறுகால் விருதுநகர் பாலம்மாள் நகர் மக்கள் அவதி

விருதுநகர் : விருதுநகர் பாலம்மாள் நகரில் காலை பதம் பார்க்கும் மண் ரோடு, முடிவு பெறாத வாறுகாலால் கழிவுநீர் தேக்கம், தெருவிளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்த தெருக்கள், உவர்ப்பு நீர் என அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சிக்குட்பட்டது பாலம்மாள் நகர் . புது பஸ் ஸ்டாண்ட் எதிரே அமைந்துள்ள இப்பகுதி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளதால் குடியிருப்பு பெருகி வருகிறது. இப்பகுதியில் போதுமான ரோடு வசதியில்லை. மண் ரோடாக உள்ளதால் சிரமம் உள்ளது. நடந்து செல்வோர் கால்களை பதம் பார்க்கிறது. வாகன ஓட்டிகளை சறுக்கி விழ செய்கிறது. மெயின் தெருவில் வாறுகால் செல்கிறது. ஆனால் இது எம்.ஜி.ஆர்., சிலை அருகே செல்லும் வடிகாலோடு இணைக்கப்படவே இல்லை. இதனால் மழைக்காலங்களில் குடியிருப்பை சுற்றி கழிவுநீர் தேங்கி பெரும் கொசுத்தொல்லை பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதே போல் அருகே தொண்டு நிறுவன இல்லம் செயல்படுகிறது. அதன் முன்பும் கழிவுநீர் தேங்குகிறது. இப்பகுதியில் மின் ஊழியர்கள் மரங்களை வளர்க்க அனுமதிப்பதில்லை. மரங்கள் வளர்ந்தால் எச்.டி.,லைனை பாதிப்பதாக ஆசிட் ஊற்றி செல்கின்றனர். மேலும் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் பணி முடிந்து வீடு திரும்புவோர் இருட்டிலே தான் வர வேண்டியுள்ளது. குடிநீர் குழாயில் உவர்ப்பு நீர் வினியோகமாகி பாதிப்பை ஏற்படுத்துவதால் மக்கள் லாரி குடிநீரை பயன்படுத்துகின்றனர். எனவே குடிநீர், ரோடு, வாறுகால், தெருவிளக்கு வசதியை ஏற்படுத்தி இம்மக்கள் நலனை காக்க வேண்டும்.

வாறுகாலை முழுமைப்படுத்துங்கள்

வாறுகால் இல்லாததால் மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறோம். இந்த பாதிப்பை கட்டுப்படுத்த வாறுகாலை முழுமைப்படுத்த வேண்டும். கொசுத்தொல்லை தாங்க முடியாத அளவில் உள்ளது. - அருள்ராணி, குடும்பத்தலைவி.

ரோடு வேண்டும்

எங்கள் பகுதியில் உள்ள மெயின் தெருக்கள், குறுக்கு தெருக்களிலும் ரோடு இல்லை. மண் ரோடு தான் உள்ளது. மழைக்காலங்களில் வாகனங்களை ஓட்ட முடியவில்லை. பழுதாகி விடுகிறது. ரோடு வசதி வேண்டும். - ஆரோக்கியமேரி, குடும்பத்தலைவி.

இருளில் வசிக்கிறோம்

பெயருக்கு குறைந்த வெளிச்சம் தரும் மூன்று விளக்குகள் மட்டுமே எரிகிறது. மற்றபடி வீடுகளின் விளக்குகள் எரிவதால் மன நிம்மதியுடன் நடமாட முடிகிறது. கூடுதல் தெருவிளக்குகள் ஏற்படுத்தி தந்தால் உதவியாக இருக்கும். - ரெஜினா மேரி, குடும்பத்தலைவி.

நல்ல குடிநீர் இல்லை

நல்ல குடிநீர் வசதி இல்லை. இதனால் கடும் சிரமப்படுகிறோம். உவர்ப்பு நீராக இருப்பதால் சிறுநீரக பிரச்னை ஏற்படலாம். சீரான சுவையான குடிநீர் வினியோகத்தை ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். - லெட்சுமி, குடும்பத்தலைவி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ