தலைமை தபால் நிலையத்தில் இணைய கோளாறால் மக்கள் அவதி
விருதுநகர்: விருதுநகர் தலைமை தபால் நிலையத்தில் இணைய கோளாறால் ஆர்.டி., உள்ளிட்ட சேவைகளுக்காக வரும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விருதுநகர் பாண்டியன் நகரில் தலைமை தபால் நிலையம் உள்ளது. இதில் அஞ்சல் சேவைகள், வங்கி சேவைகள், இதர சேவைகள் அடங்கிய பல பொதுப் பணிகளைச் செய்கின்றனர். வங்கி சேவைகளில் சேமிப்பு கணக்குகள், தொடர் வைப்பு கணக்குகள், பிக்ஸட் டெபாசிட் கணக்குகள், கடன் வசதிகள் போன்றவை வழங்கப்படுகின்றன. இதர சேவைகளில், ஆதார் அட்டை பதிவு செய்தல், பயணக் காப்பீடு போன்ற பல பொதுப் பணிகளும் அடங்கும். இவை தவிர ஆதார் அட்டை பதிவு செய்தல், பயணக் காப்பீடு, நுாறு நாள் திட்ட ஊதியங்கள், முதியோர் ஓய்வூதியம் வழங்குதல், டிஜிட்டல் தபால் சேவைகள், பணப் பரிமாற்றங்கள் போன்ற சேவைகள் செய்யப்படுகின்றன. இவை அனைத்திற்கும் இணையம் என்பது மூலமாக உள்ள சூழலில் ஒரு வாரமாக இணைய கோளாறு ஏற்பட்டு தபால் நிலையமே ஸ்தம்பித்து வருகிறது. இதனால் சேமிப்பு கணக்கான ஆர்.டி., சேவைக்கு பணம் செலுத்த வருவோரும், பண பரிமாற்றம், ஓய்வூதியம் எடுப்பது போன்வற்றிற்காக வருவோர் காத்திருந்து காத்திருந்து சிரமத்தை அனுபவிக்கின்றனர். சர்வர் கோளாறு, இணைய பிரச்னை என்று கூறி அலுவலக ஊழியர்கள் சமாளிக்கின்றனர். இதை நம்பி பல முதியோர், வாடிக்கையாளர்கள் உள்ளதால் இணையக் கோளாறை தபால்துறையினர் உடனடியாக சரி செய்ய வேண்டும்.