ஆவியூர், கல்குறிச்சியை பேரூராட்சியாக தரம் உயர்ந்த மக்கள் எதிர்பார்ப்பு
காரியாபட்டி: அதிக மக்கள் தொகை கொண்ட, பெரிய ஊராட்சிகளான ஆவியூர், கல்குறிச்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். காரியாபட்டி அருகே மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலையில், அதிக மக்கள் தொகை கொண்ட, பெரிய ஊர்களான ஆவியூர், கல்குறிச்சியில் தலா 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். ஊராட்சிகளாக செயல்பட்டு வருவதால் தேவையான அடிப்படை வசதிகளை சரிவர செய்ய முடியவில்லை. அடிப்படை வசதிகளை கேட்டும், பெற முடியாத பகுதி மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.இதற்கு போதிய நிதி கிடைப்பதில்லை. ஆனால் உள்ளாட்சி நிர்வாகங்கள் மீது மக்கள் குற்றசாட்டு வைக்கின்றனர். இரு ஊராட்சிகளையும் மூன்றாம் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்பது, அக்கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது. பேரூராட்சியாக தரம் உயரும் பட்சத்தில், கூடுதல் நிதி ஒதுக்கப்படும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்ய முடியும். இதனை கருத்தில் கொண்டு, இரு ஊராட்சிகளையும் ஆய்வு செய்து சட்ட விதிகளுக்கு உட்பட்டு தரம் உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒருவேளை மக்கள் தொகை அடிப்படையில் பற்றாக்குறை இருந்தால், அருகில் உள்ள சில கிராமங்களை இணைக்கலாம். கிராமப்புறங்களில் இருந்து ஏராளமானோர் குடி பெயர்ந்து கல்குறிச்சியில் குடியேறி வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, பேரூராட்சியாக தரம் உயர்த்தி, கூடுதல் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.