பெஞ்ச் இன்றி தரையில் அமரும் மாணவர்கள் பரிதவிப்பு: கற்றல் திறனுக்கு வசதிகள் ஏற்படுத்த தாமதம்
மாவட்டத்தில் 285 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவை தவிர 600க்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலை பள்ளிகள் உள்ளன. இவற்றில் தேவைப்படும் அடிப்படை வசதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் சுற்றுச்சுவர், கழிப்பறைகள் இல்லையென்றால் கழிப்பறை வசதியும், இருந்தால் மின்சாரம், குடிநீர் வசதியும் செய்ய முன்னுரிமை தரப்படுகிறது. ஆனால் நிதி பற்றாக்குறை இருப்பதால் பணிகள் மெல்ல மெல்ல நடந்த படி உள்ளன.இந்நிலையில் ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் பெஞ்ச், டெஸ்க் இல்லாததால் தரையில் அமரும் சூழல் அதிகம் உள்ளது. இதனால் அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது. அருப்புக்கோட்டை பாலவநத்தம் பள்ளி, காரியாபட்டி ஜோகில்பட்டி பள்ளி உள்ளிட்ட பல பள்ளிகளில் இந்த சிக்கல் உள்ளது. விருதுநகர், சிவகாசி கல்வி மாவட்டங்களில் நிறைய பள்ளிகளில் இருக்கை பிரச்னைகள் உள்ளது.இருக்கை இருந்தாலும் அவை சேதமடைந்து அரைகுறையாய் மாணவர்கள் பயன்படுத்தும் சூழலும் உள்ளது. மேலும் அவர்கள் அமர்ந்துள்ள தரையும் போதிய சுகாதாரம் இன்றி உள்ளது. மாணவர்களின் தேவையான பெஞ்ச், டெஸ்க் வசதியை ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் எத்தனை பள்ளிகளில் தேவை என்பதை ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.கற்றல் திறனுக்கு மிகவும் அடிப்படையான வகுப்பறை சுகாதாரம், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் பள்ளிக்கல்வித்துறை மெத்தனம் காட்டுவது ஏன். தாமதம் செய்வதால் பலன் ஏதுமில்லை. கலெக்டர், சி.இ.ஓ., கள ஆய்வுகளில் இவை கண்டறியப்பட்டாலும், தீர்வு வரை செல்வதில்லை. அரசு பள்ளிகளுக்கு நன்கொடை அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதில் பெற்ற நிதி மூலமாவது மாணவர்களுக்கு பெஞ்ச் டெஸ்க் வசதி ஏற்படுத்தி கொடுக்கலாம். அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தலாம். ஏதாவது ஒரு வழியில் மாணவர்கள் தரையில் அமர்வதை தவிர்த்து விரைந்து பெஞ்ச், டெஸ்க் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.