சகதி ரோடுகளால் மாற்றுத்திறனாளிகள் பரிதவிப்பு ; வெளியில் வரவே அச்சப்படும் சூழல்
விருதுநகர் : மாவட்டத்தில் ஊரக குடியிருப்பு பகுதிகளில் உள்ள மழைக்கால மண் சகதி ரோடுகளால் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படும் சூழல் உள்ளது. வெளியில் வரவே அச்சப்படும் சூழல் உள்ளது.மாவட்டத்தில் நகராட்சிகளை யொட்டி உள்ள ஊராட்சிகளில் மண் ரோடுகளே அதிகமாக உள்ளன. ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் இவற்றை முன்கூட்டியே சரி செய்ய வேண்டும் என குடியிருப்போர் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது இந்த வாரம் பெய்து வரும் கனமழையால் அனைத்து ரோடுகள் சகதியாய் மாறி போக்குவரத்துக்கு பெரிய பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பெரும் சிரமத்திற்கு மக்கள் ஆளாகி வருகின்றனர். கிராமப்புறங்களில் அதிகளவில் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். கால் முடக்கத்தால் மூன்று சக்கர டூவீலர்களை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள், அது கூட இல்லாத மாற்றுத்திறனாளிகள் சகதி ரோடுகளை பயன்படுத்த முடிவதில்லை. வெளியில் வரவே அச்சப்படும் சூழல் உள்ளது.மாற்றுத்திறனாளிகள் அதிகம் உள்ள பகுதிகள், குடியிருப்புகளில் இது போன்ற மண் ரோடு காணப்பட்டிருந்தால் அவற்றை முன்னுரிமை தந்து சரி செய்தால் இந்த நிலை வந்திருக்காது. இன்றளவும் பெரிய பிரச்னையாக இது உள்ளது. முதியவர்கள், கர்ப்பிணிகளையே சறுக்கி விழ செய்யும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன இந்த ரோடுகள். நகராட்சிகளை யொட்டி உள்ள ஊராட்சிகளில் குடியிருப்புகள் பெருகி விட்டதால் இப்பகுதிகளில் அடிப்படை வசதிகள் பெரிய தேவையாக உள்ளது. ஆனால் அதை செய்து கொடுக்கும் அளவுக்கு ஊராட்சிகளிலும் நிதியில்லை. இந்த முரண்பாடால் மண் ரோடுகள் தான் அதிகம் காணப்படுகின்றன. மழை நேரங்களில் மருத்துவ தேவைக்கு கூட மாற்றுத்திறனாளிகள் வெளியே செல்ல முடியாமல் மாட்டி கொள்ளும் அவல நிலை உள்ளது. அதே போல் அவசர உதவிகளுக்கு ஆம்புலன்ஸ்கள் கூட உள்ளே வர முடியாத சூழல் உள்ளது. தற்போது மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் மழை அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், இந்த பாடாவதி மண் ரோடுகள் தான் பெரிய தொல்லையாக உள்ளது. இது போன்ற சகதி ரோடு பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.