உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குண்டும் குழியுமான ரோடு; நிழற்குடை தேவை சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்

குண்டும் குழியுமான ரோடு; நிழற்குடை தேவை சிரமத்தில் காரியாபட்டி பேரூராட்சி மக்கள்

காரியாபட்டி: நான்கு வழிச்சாலையில் காரியாபட்டி கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் நிழற்குடை இல்லாதது, வீதிகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம், திருச்செந்தூர் பஸ்கள் நின்று செல்லாததால் பயணிகள் அவதி என மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். காரியாபட்டி பேரூராட்சியில் அண்ணா நகரில் உள்ள முக்கிய வீதி படு மோசமாக உள்ளது. இந்த வீதி வழியாக பல்வேறு வீதிகளுக்கு இணைப்பு வீதியாக உள்ளது. பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் சென்றுவர முடியவில்லை. நான்கு வழிச்சாலையில் காரியாபட்டி - கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் திருச்செந்தூர் செல்லும் பயணிகள் வெயில், மழைக்கு திறந்தவெளியில் நிற்பதால், பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு ஏராளமான அரசு மொபசல் பஸ்கள் சென்று வருகின்றன. ஒரு சில பஸ்கள் மட்டுமே டிரைவர்கள் நிறுத்தி செல்கின்றனர். பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மரத்தடியில் ஒதுங்க வேண்டியுள்ளது. பல்வேறு பஸ்கள் மாறி செல்ல வேண்டி இருப்பதால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.

நிழற்குடை அவசியம்

காரியாபட்டி பகுதியில் இருந்து ஏராளமானோர் திருச்செந்தூர் சென்று வருகின்றனர். காரியாபட்டி கள்ளிக்குடி பிரிவு ரோட்டில் மொபசல் பஸ்களுக்காக காத்திருக்கின்றனர். எப்போதாவது ஒரு பஸ் நிறுத்துவதால் பயணிகள் நீண்ட நேரம் திறந்தவெளியில் நிற்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. வெயில் மழைக்கு பாதிக்கப்படுகின்றனர். நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - மணிகண்டன் தனியார் ஊழியர்

ரோட்டில் பெயர்ந்த பேவர் பிளாக்குகள்

வீதிகள் அனைத்தும் பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து படு மோசமாக உள்ளது. வாகனங்கள் சென்று வர முடியவில்லை. ஆட்கள் நடந்து சென்றால் இடறி விழுகின்றனர். வீதியில் குறுக்கே மின்கம்பங்கள் உள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. வீதியை சீரமைத்து, இடையூறாக உள்ள மின் கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும். - கணேசன் தனியார் ஊழியர்

பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை தேவை

திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பஸ்கள் நின்று செல்லாததால், மற்ற ஊர்களுக்கு சென்று மாறி செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. ஏற்கனவே நான்கு வழிச்சாலையில் பஸ்கள் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். டிரைவர்கள் அதனை கண்டும் காணாமல் செல்வதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். - பாலமுருகன் தனியார் ஊழியர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை