காற்றுக்கு அடிக்கடி அறுந்து விழும் மின்கம்பிகள்: ஊரக பகுதிகளில் துரித நடவடிக்கை அவசியம்
மாவட்டத்தில் 30 ஆண்டுகளைக் கடந்தும் பெரும்பாலான ஊர்களுக்கு செல்லும் மின் வழித்தட மின் கம்பங்கள், கம்பிகள் இன்னும் மாற்றப்படாமல் அப்படியே பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதனுடைய உறுதித் தன்மை குறைந்து எப்போது கம்பங்கள் உடைந்து, ஒயர்கள் அருந்து விழுமோ என்கிற சூழ்நிலை இருக்கிறது.விளைநிலங்களில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருக்கின்றன. அவற்றை நேராக நிமர்த்தி நட மின் ஊழியர்கள் பெரும்பாலும் முன் வருவதில்லை. காரணம் அதிக செலவு ஏற்படும் என்பதற்காக கண்டும் காணாமல் விட்டுவிடுகின்றனர். ஒட்டுமொத்தமாக சாய்ந்து விபத்து ஏற்படும் சூழ்நிலை இருந்து வருகிறது.பெரும்பாலான இடங்களில் மின் கம்பிகளை உரசிக்கொண்டு மரக் கிளைகள் உள்ளன. தற்போது காற்று பலமாக வீச துவங்கியுள்ளது. மழை நேரங்களில் சூறாவளிக்காற்று வீசும் போதும் மின் கம்பிகளில் கிளைகள் உரசி அறுந்து விழும் ஆபத்தான சூழ்நிலை இருந்து வருகிறது. குடியிருப்பு பகுதிகள், விளைநிலங்களில் மின் கம்பிகள் தாழ்வாக தொடும் துாரத்தில் இருப்பதால் அப்பகுதியில் போவோர் வருவோர் விபத்தில் சிக்க நேரிடுகிறது.விவசாய பணிக்கு டிராக்டர்களை வயல்களுக்கு கொண்டு செல்லும் போது தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளில் உரசி விபத்து நடக்கிறது. நேற்று வீசிய பலத்த சூறாவளி காற்றுக்கு நரிக்குடி சொட்டமுறி குடியிருப்பு பகுதியில் மின் ஒயர் அறுந்து விழுந்தது. கிராமத்தினர் சுதாரித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து, மின்சாரத்தை துண்டித்ததால் விபத்து நடப்பது தவிர்க்கப்பட்டது.எனவே மின் கம்பங்கள் உடைந்தோ, ஒயர்கள் அறுந்து விழும் போது தகவல் கிடைத்தவுடன் மின் ஊழியர்கள் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும். சில இடங்களில் கையூட்டு எதிர்பார்த்து காலதாமதப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.ஆபத்தான சூழ்நிலையை கருத்தில் கொண்டு விபத்து நடந்த உடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.